தக்காளி விலை மீண்டும் உச்சத்தை தொட்டது

தஞ்சையில், தக்காளி விலை மீண்டும் உச்சத்தை தொட்டது. கிலோ ரூ.140-க்கு விற்பதால் பொதுமக்கள் குறைந்த அளவே வாங்கி செல்கின்றனர்.

Update: 2023-07-29 20:19 GMT

தஞ்சையில், தக்காளி விலை மீண்டும் உச்சத்தை தொட்டது. கிலோ ரூ.140-க்கு விற்பதால் பொதுமக்கள் குறைந்த அளவே வாங்கி செல்கின்றனர்.

தக்காளி விலை

கடந்த மாதம் (ஜூன்) ஒரு கிலோ தக்காளி தஞ்சையில் உள்ள மார்க்கெட்டுகளில் அதிகபட்சமாக ரூ.28 முதல் ரூ.30 வரையில் விற்பனை ஆனது. இந்த விலை உயர்வையே அப்போது மக்களால் தாங்க முடியவில்லை என்று செய்திகள் வெளியாகின.

ஆனால் அதன் பிறகு கிடுகிடுவென தக்காளி விலை உயரத் தொடங்கியது. அண்டை மாநிலங்களில் மழை, தமிழ்நாட்டில் போதிய விளைச்சல் இல்லாதது போன்ற காரணங்களால் தக்காளி விலை தாறுமாறாக எகிறியது. அதன்படி இம்மாத தொடக்கத்தில் ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.110 வரை விற்கப்பட்டது.

மீண்டும் உச்சம்

இதன் தொடர்ச்சியாக ஏற்ற இறக்கத்துடன் தக்காளி விலை இருந்து வந்தது. தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் தக்காளி விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் பின்னர் விலை குறைந்து ரூ.110-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தக்காளி வரத்து மேலும் குறையத்தொடங்கியதையடுத்து தற்போது விலை அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு கிலோ தக்காளி கிலோ ரூ.30 விலை உயர்ந்து ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் தக்காளி வாங்குவதற்கு வந்தவர்கள் குறைந்த அளவே வாங்கிச்சென்றனர்.

வரத்து குறைவு

தக்காளி வரத்து போதிய அளவுக்கு இல்லாததாலேயே அதன் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த வண்ணம் உள்ளது. வரும் நாட்களிலும் வரத்து குறையுமானால் தக்காளியின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.

தக்காளியோடு சேர்ந்து விலை உயர்வில் பயணித்த சின்ன வெங்காயம் தற்போது குறைந்துவரும் சூழ்நிலையில், தக்காளி மட்டும் தொடர்ந்து உச்சத்திலேயே இருப்பது இல்லத்தரசிகளை கலக்கம் அடையச் செய்திருக்கிறது.

இதனால் வீட்டில் தக்காளியை எண்ணி எண்ணி சமையலுக்கு பயன்படுத்தும் நிலைக்கு இல்லத்தரசிகள் தள்ளப்பட்டுள்ளனர். பல வீடுகளில் தக்காளி சட்னி, தக்காளி சாதத்தை மறந்தே விட்டார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்