ராயக்கோட்டை பகுதியில் விளைச்சல் பாதிப்பால் தக்காளி விலை கிடுகிடு உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
ராயக்கோட்டை
ராயக்கோட்டை பகுதியில் விளைச்சல் பாதிப்பால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தக்காளி மார்க்கெட்
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை கூட்டு ரோடு, எச்சம்பட்டி பிரிவு ரோடு மற்றும் ஓடையாண்டஅள்ளி பிரிவு ரோடு ஆகிய இடங்களில் தக்காளி மார்கெட் உள்ளது. இது தமிழ்நாட்டிலேயே பெரிய தக்காளி மார்க்கெட்டாக இது உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் தக்காளி இங்கு கொண்டு வந்து பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
இங்கிருந்து சென்னை கோயம்மேடு, திருச்சி, சேலம் மற்றும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு தக்காளியை வியாபாரிகள் வாங்கி வாகனங்களில் அனுப்பி வருகின்றனர். சமீபத்தில் பெய்த மழையால் தக்காளி செடிகள் அழுகி விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் தக்காளி சாகுபடி குறைந்தது. இதன் காரணமாக தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
கிடு,கிடு உயர்வு
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 20 கிலோ அளவு உள்ள ஒரு பெட்டி தக்காளி ரூ.300-க்கு விற்பனை ஆனது. தற்போது விளைச்சல் பாதிப்பால் மார்க்கெட்டுக்கு தக்காளி குறைய தொடங்கியது. இதன் காரணமாக விலை கிடுகிடுவென உயர்ந்து 20 கிலோ பெட்டி ரூ.1,700 முதல் ரூ.2 ஆயிரம் வரை விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், தற்போது தக்காளி வரத்து குறைந்ததால் மார்க்கெட்டில் விலை அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு அடுத்து வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று தெரிவித்தனர். தக்காளி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.