செடியில் அழுகும் தக்காளி பழங்கள்

வெண்ணந்தூர் பகுதியில் பெய்த வடகிழக்கு பருவமழையின் காரணமாக தக்காளி பழங்கள் செடியிலேயே அழுகி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.;

Update: 2022-12-10 18:45 GMT

வெண்ணந்தூர்

சுழற்சி முறையில்

வெண்ணந்தூர் மற்றும் அத்தனூர் அதனை சுற்றுவட்டார பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. இங்குள்ள விவசாயிகள் சுழற்சிமுறையில் கீரைகள், காய்கறிகளையும் நீர் இருப்புக்கு ஏற்றவாறு ஆண்டு பயிர்களையும், நீண்டகால பயிர்களையும் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது பெய்த மழையால் வெண்ணந்தூர் மற்றும் அதன் சுற்றியுள்ள குளம், குட்டைகள் நிரம்பி காணப்படுகிறது. இதனால் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் போதுமான அளவு நீர்இருப்பு உள்ளதால் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களும், தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் வளர்ந்து விவசாயிகளுக்கு விளைச்சலை அளித்து வருகிறது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக வெண்ணந்தூர் மற்றும் அத்தனூர் சுற்றுப்புற பகுதியில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக சாரல் மழையும் அவ்வப்போது கன மழையும் பெய்து வருகிறது. இதன்காரணமாக அத்தனூர் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தக்காளிகள் செடிகளிலேயே அழுகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

அழுகும் தக்காளி

இது குறித்து விவசாயி கூறியதாவது:-

பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வந்தாலும் அன்றாட வருமானத்தை அளிக்கக்கூடிய தக்காளி சாகுபடி விவசாயிகளின் முதல் தேர்வாக உள்ளது. வெப்ப மண்டல பயிரான தக்காளியை ஜூன், ஜூலை, நவம்பர், டிசம்பர், பிப்ரவரி, மார்ச் மாதத்தில் சாகுபடி செய்யலாம். நாற்றுப் பண்ணைகளில் இருந்து தக்காளி நாற்றுகளை வாங்கி வந்து நடவு செய்து வருகின்றோம். நடவு செய்த நாளில் இருந்து 55 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடுகிறது. அதன் பின்பு குறிப்பிட்ட இடைவெளியில் தக்காளியை பறித்துக் கொண்டே இருக்கலாம். சொட்டுநீர் மற்றும் நேரடி பாசனம் மூலமாக தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நிலமும் ஈரப்பதத்திற்கு மாறி உள்ளது. இதனால் தக்காளிகள் செடிகளிலேயே அழுகி வருகிறது. மேலும் ஈரப்பதத்தின் காரணமாக களை பறிக்க முடியாததால் செடிகளை புதர் சூழ்ந்து விட்டது. மழைக்கு பின்பு தக்காளிக்கு ஓரளவுக்கு விலை கிடைத்து வருகிறது. அதன்படி 12 கிலோ கொண்ட பெட்டி ஒன்று ரூ.120 வரையிலும் விற்பனை ஆகிறது. ஆனாலும் செடிகளிலேயே தக்காளிகள் அழுகி வருவதால் விளைச்சல் பாதியாக குறையும் சூழல் உள்ளது. இதனால் வருமான இழப்பை சந்திக்கும் சூழல் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்