தக்காளி கிலோ ரூ.11.50-க்கு ஏலம்

கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் தக்காளி கிலோ ரூ.11.50-க்கு ஏலம் போனது. தொடர் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2022-11-09 18:45 GMT

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் தக்காளி கிலோ ரூ.11.50-க்கு ஏலம் போனது. தொடர் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தக்காளி விவசாயம்

கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் தக்காளி விவசாயம் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு மட்டும் கிணத்துக்கடவு, வடபுதூர், கல்லாபுரம், சொக்கனூர், சிங்கையன்புதூர், நெம்பர் 10 முத்தூர், சூலக்கல், மேட்டுப்பாளையம், கோவில்பாளையம், முள்ளுப்பாடி, நல்லட்டிபாளையம், கோதவாடி, அரசம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 242.32 ஹெக்டர் பரப்பளவில் தக்காளி விவசாயம் நடைபெற்று வருகிறது. தற்போது கிராம பகுதியில் இருந்து கிணத்துக்கடவு பஸ் நிலையம் பகுதியில் உள்ள தினசரி காய்கறி சந்தைக்கு தக்காளி வரத்து தொடங்கியுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் ஒரு கிலோ தக்காளி 15 ரூபாய்க்கு ஏலம் போனது. தற்போது கிணத்துக்கடவு பகுதியில் தக்காளி உற்பத்தி அதிகரித்துள்ளதால் சந்தைக்கு வரத்தும் அதிகரித்துள்ளது.

விலை வீழ்ச்சி

இதனால் நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 40 டன் தக்காளிகள் விற்பனைக்கு வந்திருந்தது. தொடர்ந்து நடைபெற்ற ஏலத்தில் கடந்த வாரத்தை விட தக்காளி விலை வீழ்ச்சியடைந்தது.

அதாவது ஒரு கிலோ 11 ரூபாய் 50 பைசாவிற்கு ஏலம் போனது. இது கடந்த வாரத்தை விட 3 ரூபாய் 50 காசு குறைவாகும். தொடர்ந்து தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து வருவதால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடும் நஷ்டம்

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

தக்காளி உற்பத்தி அதிகரிக்கும் நேரத்தில் விலை வீழ்ச்சி அடைவது மிகவும் கவலையாக உள்ளது. ஒரு ஏக்கரில் தக்காளி பயிரிட்டு அதற்கு தேவையான உரமிடுவது, மருந்துகள் அடிப்பது என பல்வேறு பணிகளுக்கு சுமார் ரூ.1½ லட்சம் செலவாகிறது. ஆனால் 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி குறைந்தது 250 ரூபாய்க்காவது விற்பனையாக வேண்டும். ஆனால் 160 ரூபாய்க்கு மட்டுமே விற்பனையாகிறது. இது எங்களுக்கு கடும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் சில்லறை விற்பனை கடைகளில் கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனையாகிறது. ஆனால் விவசாயிகளுக்கு ஏற்ற விலை கிடைப்பது இல்லை. எனவே தமிழக அரசு தக்காளிக்கு குறிப்பிட்ட விலையை நிர்ணயம் செய்து தர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்