வரத்து குறைந்ததால்தக்காளி விலை மீண்டும் ரூ.100-ஐ கடந்தது

Update: 2023-07-27 19:00 GMT

வரத்து குறைந்ததால் தக்காளி விலை மீண்டும் ரூ.100-ஐ கடந்தது. தர்மபுரி உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.106-க்கு விற்பனை செய்யப்பட்டது.

விளைச்சல் பாதிப்பு

தக்காளி அதிகம் விளையும் பகுதிகளில் ஒன்றான தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கத்தால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் தர்மபுரி மாவட்டத்தில் உழவர் சந்தைகளில் இந்த மாதத்தின் தொடக்கத்திலேயே தக்காளி விலை ரூ.100-ஐ தொட்டது. வெளி மார்க்கெட்டில் ரூ.120 முதல் ரூ.130 வரை பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டது.

தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்ததால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் வீடுகளில் உணவு சமைப்பதற்கு தக்காளியை அதிகளவில் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக பலர் வீடுகளில் சாம்பார், ரசம் மற்றும் குழம்பு வைக்க தக்காளிக்கு பதிலாக புளியை பயன்படுத்தி வந்தனர்.

மீண்டும் விலை உயர்வு

கடந்த வாரத்தில் சந்தைக்கு தக்காளி வரத்து சற்று அதிகரித்ததால் அதன் விலை குறைந்தது. ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்வதால் சந்தைக்கு தக்காளி வரத்து மீண்டும் குறைந்தது. நேற்று முன்தினம் தர்மபுரி உழவர் சந்தையில் அதிகபட்சமாக கிலோ ரூ.98-க்கு விற்பனையான தக்காளி நேற்று கிலோவுக்கு ரூ.8 அதிகரித்தது.

இதனால் தக்காளி விலை மீண்டும் ரூ.100-ஐ கடந்தது. நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.106-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெளி மார்க்கெட்டுகளில் ரூ.120 முதல் பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டது. தர்மபுரி உழவர் சந்தையில் தக்காளி விலை மீண்டும் ரூ.100-ஐ கடந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்