உளுந்தூர்பேட்டை, திருமாந்துறை சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு
உளுந்தூர்பேட்டை மற்றும் திருமாந்துறை சுங்கச்சாவடிகளில் வருகிற 1-ந் தேதி முதல் சுங்க கட்டணம் உயருகிறது.;
உளுந்தூர்பேட்டை:
மாநிலம் முழுவதும் பல்வேறு சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒரு முறை குறிப்பிட்ட நாட்களில் சுங்க கட்டணம் உயர்த்துவது வழக்கம். அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் கடலூர் மாவட்டம் தொழுதூர் அருகே உள்ள திருமாந்துறை ஆகிய 2 சுங்கச்சாவடிகளிலும் அடுத்த மாதம்(செப்டம்பர்) 1-ந் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் கார் முதல் கனரக வாகனங்கள் வரை சுங்க கட்டணம் உயருகிறது.
கார், வணிக போக்குவரத்து வாகனங்கள்
அதன்படி கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களுக்கு ஒரு முறை பயணம் செய்ய ரூ.55-ல் இருந்து ரூ.65 ஆகவும், 24 மணி நேரத்தில் பல முறை பயணம் செய்ய ரூ.85-ல் இருந்து ரூ.100 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வகை வாகனங்களுக்கான மாத கட்டணம் ரூ.1960 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மினிலாரி மற்றும் இலகுரக வணிக போக்குவரத்து வாகனங்களுக்கு ஒரு முறை பயணம் செய்ய ரூ.100-ல் இருந்து ரூ.115 ஆகவும், 24 மணி நேரத்தில் பல முறை பயணம் செய்ய ரூ.150-ல் இருந்து ரூ.170 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வகை வாகனங்களுக்கான மாத கட்டணம் ரூ.3435 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பஸ், லாரி
பஸ் மற்றும் லாரிகளுக்கு ஒரு முறை பயணம் செய்ய ரூ.200-ல் இருந்து ரூ.230 ஆகவும், 24 மணி நேரத்தில் பல முறை பயணம் செய்ய ரூ.300-ல் இருந்து ரூ.345 ஆகவும் வசூலிக்கப்பட உள்ளது. இவ்வகை வாகனங்களுக்கான மாத கட்டணம் ரூ.6 ஆயிரத்து 870 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பல அச்சுகள் கொண்ட வாகனங்கள், அதாவது கனரக போக்குவரத்து மற்றும் வணிக போக்குவரத்து வாகனங்களுக்கு ஒரு முறை பயணம் செய்ய ரூ.320-ல் இருந்து ரூ.370 ஆகவும், 24 மணி நேரத்தில் பல முறை பயணம் செய்ய ரூ.480-ல் இருந்து ரூ.550 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வகை வாகனங்களுக்கான மாத கட்டணம் ரூ.11 ஆயிரத்து 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.