சுங்கச்சாவடியில் கட்டண விலக்கு அளிக்கவேண்டும்
சுங்கச்சாவடியில் கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என்று முன்னாள் ராணுவத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்திய ராணுவத்தின் மருத்துவ பிரிவில் ஓய்வு பெற்ற வீரர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பழனியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு பழனி முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்க செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பழனிசாமி, பாலசேகரன், ஸ்ரீதர்பாபு, கனகராஜ், கருப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக தமிழக முன்னாள் ராணுவ வீரர்கள் சங்க தலைவர் கர்னல் சி.டி.அரசு, லெப் கர்னல் ஈஸ்வரி, கேரள முன்னாள் ராணுவ வீரர்கள் சங்க தலைவர் விஜயன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் ராணுவத்தினருக்கு சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்கு, ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு மருத்துவ படிப்பில் 5 சதவீத இடஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை அரசுக்கு வலியுறுத்துவது என முடிவு செய்யப்பட்டது. பின்னர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதில் சென்னை, வேலூர், கோவை, மதுரை, தேனி, திண்டுக்கல் உள்பட 20 மாவட்டங்களை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.