கட்டணமில்லா ஆண்கள் சுகாதார வளாகம்

திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள கோவில்வழி பஸ் நிலையத்தில் உள்ள கட்டணமில்லா ஆண்கள் சுகாதார வளாகம் பூட்டப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பரிதவித்து வருகின்றனர்.

Update: 2022-06-09 16:36 GMT

திருப்பூர்

திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள கோவில்வழி பஸ் நிலையத்தில் உள்ள கட்டணமில்லா ஆண்கள் சுகாதார வளாகம் பூட்டப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பரிதவித்து வருகின்றனர்.

கழிப்பிடத்திற்கு பூட்டு

திருப்பூர் தாராபுரம் ரோடு கோவில் வழியில் புறநகர பஸ்நிலையம் உள்ளது. இங்கிருந்து தாராபுரம், திண்டுக்கல், பழனி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் உள்பட பல ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதிக அளவில் பஸ்கள் இயக்கப்படுவதால் இந்த பஸ் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து சென்றவண்ணம் உள்ளனர். இப்படிப்பட்ட நிலையில் இந்த பஸ் நிலையத்தில் உள்ள இலவச கழிப்பிடத்தில் ஆண்கள் பகுதியில் கழிவறையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இதை சீரமைப்பதற்கு பதில் கடந்த சில வாரங்களாக ஆண்கள் கழிப்பிடம் பூட்டி போடப்பட்டுள்ளது. மேலும், கழிவறை வாசலில் முட்செடிகள் குவித்து போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பஸ்சில் நீண்ட தூரம் பயணம் செய்து விட்டு களைப்புடன் வரும் பயணிகள் கழிவறை பூட்டி கிடப்பதை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். சில பயணிகள் வேறு வழியின்றி கட்டண கழிப்பிடத்தை தேடி செல்கின்றனர். கட்டண கழிப்பிடம் பஸ் நிலையத்தின் கடைசியில் இருப்பதால் வயதானவர்கள் நடந்து செல்ல முடியாமல் இயற்கை உபாதையை கழிக்க பரிதவிக்கின்றனர்.

கட்டண வசூலுக்கான நடவடிக்கை?

இது ஒருபுறமிருக்க, ஆண்கள் கழிப்பிடத்தையொட்டியவாறு இருக்கும் இலவச பெண்கள் கழிப்பிடம் தற்போது பயன்பாட்டில் உள்ளது. ஆனால், கழிவறை முற்றிலும் பராமரிப்பின்றி உள்ளே குப்பைகள் நிரம்பி கிடக்கின்றன. மேலும், கழிவறை சுத்தம் செய்யப்படாமல் கடுமையான துர்நாற்றம் வீசி வருவதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதேபோல், இந்த கழிப்பிடத்தில் உள்ள தண்ணீர் குழாய்கள் சேதமடைந்து கிடப்பதால் கழிவறையை பயன்படுத்தும் பெண்கள் தண்ணீர் வசதியின்றி சிரமப்படுகின்றனர். இவ்வாறாக இலவச கழிப்பிடத்தை ஆண்களும், பெண்களும் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பது பயணிகளை வருத்தம் கொள்ள செய்கிறது. குறிப்பாக பண்டிகை மற்றும் விஷேச நாட்களில் பஸ் நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும். அதுபோன்ற நாட்களில் போதுமான கழிவறை வசதியின்றி பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

கட்டண கழிப்பிடத்தின் வசூலை அதிகரிப்பதற்காகத்தான் இலசவ கழிப்பிடம் சீரமைக்கப்படாமல் உள்ளது என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே அதிகாரிகள் இலவச கழிப்பிடத்தை சீரமைத்து,பயணிகள் பயன்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பார்களா?.

Tags:    

மேலும் செய்திகள்