திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலில் இன்று குடமுழுக்கு
திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலில் 14 இன்று குடமுழுக்கு நடக்கிறது. யாகசாலை பூஜையில் எம்.பி.க்கள், அரசு கொறடா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.;
திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலில் 14 இன்று குடமுழுக்கு நடக்கிறது. யாகசாலை பூஜையில் எம்.பி.க்கள், அரசு கொறடா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஒப்பிலியப்பன் கோவில்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் ஒப்பிலியப்பன் கோவில் உள்ளது. இங்கு வெங்கடாசலபதி அருள்பாலித்து வருகிறார். 108 திவ்ய தேசங்களில் புகழ்பெற்ற இக்கோவில் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது.
பூலோக வைகுண்டம், திருவிண்ணகர் என்றெல்லாம் போற்றப்படும் இக்கோவிலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டு, திருப்பணி வேலைகள் நடந்து வந்தன.
ரூ.3½ கோடியில் திருப்பணிகள்
இதில் கோவில் விமானங்கள், கோபுரங்கள், பிரகாரங்கள், சிறு சிறு சன்னிதிகளில் ரூ.3½ கோடி மதிப்பில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. திருப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 28 வேதிகைகள், 34 ஹோம குண்டங்கள் என யாகசாலை பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டது.
இங்கு கடந்த 25-ந் தேதி மாலை யாகசாலை பூஜைகள் தொடங்கி நடந்து வந்தன. நேற்று காலை 6-ம் கால யாக சாலை பூஜையும், இரவு 7-ம் கால யாகசாலை பூஜையும் நடந்தன.
இன்று குடமுழுக்கு
இன்று (வியாழக்கிழமை) காலை 5.30 மணிக்கு 8-ம் கால யாகசாலை பூைஜகள் தொடங்குகின்றன. 8.30 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது. காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் வெங்கடாசலபதி கோவிலுக்கும், வடக்கு வீதியில் உள்ள ஜெய வீர ஆஞ்சநேயர் கோவிலுக்கும் குடமுழுக்கு நடக்கிறது.
இரவு 7 மணிக்கு பெருமாள், தாயார் தங்க கருட சேவை மற்றும் பெரியாழ்வார், நிகமாந்த மகாதேசிகன் திருவீதி புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
ஆயிரக்கணக்கான பக்தர்கள்
குடமுழுக்கு விழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து 150 வேத விற்பன்னர்கள் வருகை தந்து 4 வேதங்களையும் பாராயணம் செய்து வருகிறார்கள். யாகசசாலை பூஜைகளை காண நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
எம்.பி.க்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம், அரசு கொறடா கோவி. செழியன், திருப்பனந்தாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் அண்ணாதுரை, பேரூராட்சி தலைவர் ஜோதி தாமரைச்செல்வன், துணைத் தலைவர் உதயா உப்பிலி, ஒன்றிய கவுன்சிலர் சுவாமிதுரை, தேப்பெருமாநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் குமரவேல், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் மகேஸ்வரி துரைராஜ், நகர இளைஞரணி வெங்கடேசன், வார்டு செயலாளர் உப்பிலி, பேரூராட்சி உறுப்பினர்கள் பாலா, அபிராமி கார்த்திகேயன், சங்கீதா வீரக்குமார், வார்டு செயலாளர் ஜோதி உள்ளிட்ட ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அன்னதானம்
கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு கடந்த 25-ந் தேதி முதல் பூமி தேவி திருமண மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. குடமுழுக்கு நடைபெறும் இன்று கோவிலுக்குள் பகல் 12 மணி வரை ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படும் நிலை இருப்பதால் பக்தர்களின் வசதிக்காக கோவிலை சுற்றி நான்கு புறமும் திரண்டு நிற்கும் பக்தர்கள் மீது புனிதநீர் 30 அடி தூரம் வரை தெளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) சாந்தா, கண்காணிப்பாளர் சக்திவேல் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.