புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
அரியலூர்:
அரியலூர் பஸ் நிலையத்தில் திருச்சி மத்திய கலால்துறை ஆணையரகம் சார்பில் 75-வது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவை முன்னிட்டு, உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அரியலூர் பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் மார்கெட் தெரு, எம்.பி.கோவில் தெரு, வெள்ளாழத்தெரு, சின்னைக்கடை தெரு, இந்திரா காந்தி தெரு, ராஜாஜிநகர், கல்லூரி சாலை, செந்துறை சாலை வழியாக மீண்டும் அண்ணா சிலைக்கு வந்து நிறைவடைந்தது.
ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள், புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்திச்சென்றனர். மேலும் பொதுமக்களுக்கு புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது. புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் புற்றுநோய், மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பல்வேறு வகையான நோய்கள் ஏற்படுகிறது. எனவே, பொதுமக்கள் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் புகையிலை பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து, நோயற்ற வாழ்வு வாழ வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஊர்வலத்தில், திருச்சி மத்திய கலால்துறை இணை ஆணையர் இளங்கோ மற்றும் தனியார் சிமெண்டு ஆலை பணியாளர்கள், நகர வணிகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.