திங்கள்சந்தை:
சுங்கான்கடை அருகே உள்ள தோட்டியோட்டில் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 9½ பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
தனியார் நிறுவன ஊழியர்
நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை சோதிரிநகரைச் சேர்ந்தவர் நாகராஜன். இவருடைய மனைவி ராஜலட்சுமி (வயது41). இவர் முளகுமூட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு வேலை முடிந்து முளகுமூட்டில் இருந்து நாகர்கோவில் நோக்கி ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார். சுங்கான்கடை அருகே உள்ள தோட்டியோடு பகுதியில் வந்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்து கொண்டிருந்தனர்.
நகை பறிப்பு
அவர்கள் திடீரென ராஜலட்சுமியை நெருங்கி வந்தனர். அப்போது பின்னால் இருந்த நபர் ராஜலட்சுமியில் கழுத்தில் கிடந்த 9 பவுன் தங்க சங்கிலியை பறித்தான். தொடர்ந்து கண்ணிமைக்கும் நேரத்தில் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பி சென்றனர்.
இதில் ராஜலட்சுமி தடுமாறி கீழே விழுந்தார். அவருக்கு நெற்றி, கை உள்ளிட்ட இடங்களில் காயங்கள் ஏற்பட்டது. இதைபார்த்ததும் அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து ராஜலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். இதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி மர்ம நபர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.