தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்துக்குமண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்தவர்களால் பரபரப்பு

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்துக்கு மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-05-08 18:45 GMT

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்துக்கு மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

மண்ணெண்ணெய் பாட்டில்

தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு கொடுத்தனர். தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 8-வது தெருவை சேர்ந்தவர் டேனியல் ராஜ் (வயது 60). இவர் நேற்று காலை மனு கொடுப்பதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அலுவலக நுழைவு வாயிலில் நின்ற போலீசார் டேனியல்ராஜ் வைத்து இருந்த பையை சோதனை செய்தனர். அதில் ஒரு மண்ணெண்ணெய் பாட்டில் இருந்தது. தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபடுவதற்காக அவர் மண்ணெண்ணெய் பாட்டிலை கொண்டு வந்திருந்தது தெரியவந்தது. உடனடியாக போலீசார் மண்ணெண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்து, அவரை எச்சரித்து அனுப்பினர். தொடர்ந்து அவர் கலெக்டரிடம் அளித்த மனுவில், 'நான் கூலி வேலை செய்து வருகிறேன். எனக்கு சொந்தமாக வடக்கு சோட்டையன்தோப்பு பகுதியில் உள்ள ரூ.20 லட்சம் மதிப்பிலான வீட்டுடன் கூடிய இடத்தின் பத்திரத்தை, அந்த பகுதியை சேர்ந்த ஒருவரிடம் அடமானமாக வைத்து கடந்த 2016-ம் ஆண்டு ரூ.1 லட்சம் கடனாக வாங்கினேன். இந்த கடனுக்கான வட்டியை சரியான முறையில் செலுத்திய போதிலும், இன்னும் ரூ.10 லட்சம் வட்டி தரவேண்டும் என அந்த நபர் என்னிடம் கேட்டு மிரட்டி வருகிறார். இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, மாவட்ட கலெக்டர் தலையிட்டு விசாரணை நடத்தி அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

மற்றொரு பெண்

இதே போன்று ஸ்ரீவைகுண்டம் வட்டம் சிங்கத்தாகுறிச்சியைச் சேர்ந்த முத்துராஜ் மனைவி அன்பு என்ற பெண்ணும் மண்ணெண்ணெய் பாட்டிலுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்து இருந்தார். போலீசார் சோதனை செய்த போது மண்ணெண்ணெய் பாட்டிலை கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக அந்த பெண் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், எனது கணவர் இறந்து 22 ஆண்டுகள் ஆகின்றன. எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். எனது கணவரின் குடும்ப சொத்து சிங்கத்தாகுறிச்சியில் உள்ளது. அதனை பங்கு பிரிவினை செய்து எனக்கு தர கணவரின் குடும்பத்தினர் மறுக்கிறார்கள். இது குறித்து கேட்டால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டுகின்றனர். எனவே, மாவட்ட கலெக்டர் தலையிட்டு எனது கணவருக்கு பாத்தியப்பட்ட சொத்தை பங்கு பிரிவினை செய்து தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்