பஞ்சாயத்து துணைத்தலைவருக்கு அரிவாள் வெட்டு

சாத்தான்குளம் அருகே பஞ்சாயத்து துணைத்தலைவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக அவரது சகோதரரை போலீசார் தேடிவருகின்றனர்.

Update: 2023-01-18 18:45 GMT

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே பஞ்சாயத்து துணைத்தலைவரை அரிவாளால் வெட்டப்பட்டு, ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரை வெட்டிய சகோதரரை போலீசார் தேடிவருகின்றனர்.

பஞ்சாயத்து துணைத்தலைவர்

சாத்தான்குளம் அருகேயுள்ள கட்டாரிமங்கலத்தை சேர்ந்த சார்லிகோயில் பிள்ளை மகன் கிறிஸ்டோபர் ஜெயராஜ் (வயது 58). இவர் கட்டாரிமங்கலம் பஞ்சாயத்து துணைத் தலைவராக இருந்து வருகிறார்.

இவருக்கும், அண்ணன் சாலமோனுக்கும் இடையே இடப்பிரச்சினையில் முன் விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலையில் கட்டாரிமங்கலம் பஸ் ஸ்டாப் அருகே கிறிஸ்டோபர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சாலமோன் திடீரென்று அவரை வழிமறித்து அவதூறாக பேசியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

அரிவாள் வெட்டு

அப்போது சாலமோன் அரிவாளால் கிறிஸ்டோபரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டாராம்.

இது குறித்து தகவல் அறிந்த சாத்தான்குளம் போலீஸ் துணை சூப்பிரண்டு அருள், இன்ஸ்பெக்டர் முத்து ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் காயங்களுடன் இருந்த அவரை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சகோதரருக்கு வலைவீச்சு

இது குறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள கிறிஸ்டோபரின் சகோதரர் சாலமோனை தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்