கிராம நிர்வாக அலுவலர் குடும்பத்துக்குஅரசு சார்பில் ரூ.1 கோடி நிவாரணம்-கனிமொழி எம்.பி. வழங்கினார்
நெல்லை அருகே கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடி நிவாரண உதவியை கனிமொழி எம்.பி. வழங்கினார்.;
நெல்லை அருகே கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடி நிவாரண உதவியை கனிமொழி எம்.பி. வழங்கினார்.
கிராம நிர்வாக அலுவலர் கொலை
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள சூசைபாண்டியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ் (வயது 53). இவர் நெல்லை அருகே உள்ள முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். கடந்த 25-ந் தேதி பணியில் இருந்த அவரை அலுவலகத்தில் புகுந்து கலியாவூரைச் சேர்ந்த ராமசுப்பிரமணியன், மாரிமுத்து ஆகியோர் வெட்டிக் கொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் குடும்பத்துக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.1 கோடி நிவாரண உதவித் தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
ரூ.1 கோடி நிவாரண உதவி
இந்த நிலையில் சூசைப்பாண்டியாபுரத்தில் உள்ள லூர்து பிரான்சிஸ் வீட்டிற்கு நேற்று கனிமொழி எம்.பி. நேரில் சென்றார். லூர்து பிரான்சிஸ் மனைவி பொன்சிட்டாளிடம் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கி ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
நேர்மையான அதிகாரி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு உள்ளார். அவரது குடும்பத்துக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிவாரண உதவியை வழங்கி ஆறுதல் தெரிவித்து உள்ளோம். இந்த கொலை தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடுமையான தண்டனை
இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 2 பேரையும் விரைவில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும் அந்த பகுதியில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக மாவட்ட கலெக்டர் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், தூத்துக்குடி உதவி கலெக்டர் கவுரவ் குமார் ஆகியோர் உடன் சென்றனர்.