விபத்தில் பலியான 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவி-சபாநாயகர் அப்பாவு வழங்கினார்

நெல்லையில் இருந்து மூணாறுக்கு சென்றபோது வேன் கவிழ்ந்த விபத்தில் பலியான 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதி உதவியை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.

Update: 2023-05-04 19:59 GMT

நெல்லையில் இருந்து மூணாறுக்கு சென்றபோது வேன் கவிழ்ந்த விபத்தில் பலியான 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவியை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.

வேன் கவிழ்ந்து 6 பேர் பலி

நெல்லை அருகே பாலாமடை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த மாதம் 22-ந் தேதி கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பகற்காக வேனில் புறப்பட்டு சென்றனர். தேனி மாவட்ட மலைப்பகுதியில் சென்றபோது வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையடுத்து விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு நேற்று மாலையில் பாலாமடைக்கு சென்று, விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, தலா ரூ.2 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

6 பேர் குடும்பம்

பாலாமடை கிராமத்தில் இருந்து திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கேரள மாநிலம் மூணாறு அருகே உள்ள தனியார் எஸ்டேட்டை நோக்கி கடந்த 22-ந்தேதி வேனில் சென்றபோது போடிமெட்டு தோன்றிமலை பகுதியில் வேன் விபத்துக்குள்ளானது. இதில் நெல்லை கல்குறிச்சி இருப்பு மூணாறில் வசித்து வரும் செல்லத்துரை மனைவி வள்ளியம்மாள் (வயது 70), மேல பாலாமடையை சேர்ந்த ஆறுமுகம் மனைவி ஜானகி (65), பாலாமடை இந்திரா நகரை சேர்ந்த பெருமாள் (58), தூத்துக்குடி மாவட்டம் கொடியங்குளத்தை சேர்ந்த சுதா (25), சுடர்ஒளி மகன்கள் சுசிந்திரன் (8) மற்றும் சுரேந்திரன் (6) ஆகியோர் உயிரிழந்தனர்.

இந்த துயரமான செய்தியை கேட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டதோடு, உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சுடர்ஒளி மனைவி சீதாலட்சுமி, பெருமாள் மனைவி இந்திராணி ஆகியோர் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

நிவாரண உதவி

அதன்படி பெருமாள், ஜானகி, சுசிந்திரன், சுரேந்திரன் ஆகிய 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்த சீதாலட்சுமி, இந்திராணி குடும்பத்தினருக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கி உள்ளோம்.

இதுதவிர தூத்துக்குடி மாவட்டம் கொடியங்குளத்தை சேர்ந்த சுதா, மூணாறில் வசித்து வரும் வள்ளியம்மாளின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி மாவட்ட நிர்வாகம் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, நெல்லை உதவி கலெக்டர் சந்திரசேகர், மாவட்ட கவுன்சிலர் கனகராஜ், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், பாலாமடை பஞ்சாயத்து தலைவர் சுப்புலட்சுமி மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்