கலெக்டர் அலுவலகத்துக்கு காலி மது பாட்டில்களை மாலையாக போட்டு மனு கொடுக்க வந்தவரால் பரபரப்பு

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்துக்கு திங்கட்கிழமை காலி மது பாட்டில்களை மாலையாக போட்டு மனு கொடுக்க வந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-12-19 18:45 GMT

தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். சுற்றுச்சூழல் ஆர்வலரான இவர் மது ஒழிப்புக்கு எதிராக பல்வேறு கட்ட பிரச்சாரங்களை செய்து வருகிறார். நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மனு கொடுப்பதற்கு காலி மது பாட்டில்களை மாலையாக கட்டி, கழுத்தில் அணிந்தபடி வந்தார். இதில் அங்கு பரபரப்பு ஏற்பட்டதால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர் கழுத்தில் அணிந்திருந்த காலி மது பாட்டில்களை அப்புறப்படுத்தினர். பின்னர் போலீசார், பாலகிருஷ்ணனை எச்சரிக்கை செய்து கலெக்டரிடம் மனு அளிக்க அனுப்பினர்.

அவர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், 'மது பிரியர்களின் நலன் கருதி ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு எவ்வளவு மது என்று மதுவின் அளவை தமிழக அரசே நிர்ணயம் செய்து அதனை அவரவர் ஆதார் அடையாள அட்டை மூலம் கைரேகை பெற்று மதுபானம் விநியோகிக்க வேண்டும்.

காலி மதுபான பாட்டில்களால் மக்களுக்கு பல்வேறு வகையில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே, காலி மதுபாட்டில்களை ஒரு பாட்டிலுக்கு ரூ.10 கொடுத்து மதுபான கடைகளிலேயே திரும்ப பெற வேண்டும்' என வலியுறுத்தி இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்