தொண்டு நிறுவன நிர்வாகிக்குசரமாரி அரிவாள் வெட்டு
ஆறுமுகநேரியில் தொண்டு நிறுவன நிர்வாகிக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. ஓட்டலில் புகுந்து கொலைவெறிதாக்குதல் நடத்திய ஏழு பேர் கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரியில் உணவகத்தில் புகுந்து தொண்டு நிறுவன நிர்வாகியை சரமாரியாக அரிவாளால் வெட்டிய 7 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தொண்டு நிறுவன நிர்வாகி
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி ராஜமன்யபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவருடைய மகன் பாலகுமரேசன் (வயது 44). இவர் ஆதவா தொண்டு நிறுவனத்தையும், அனைத்து இந்திய மாணவர்கள், இளைஞர்கள் முன்னேற்ற கழகத்தையும் நடத்தி வருகிறார். மேலும் ஆறுமுகநேரி- அடைக்கலாபுரம் ரோட்டில் ஆதவா பால்பண்ணை மற்றும் ஓட்டல் நடத்தி வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் இரவில் தனது ஓட்டலில் இருந்தார். அப்போது அங்கு பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்மகும்பல் திடீரென்று ஓட்டலுக்குள் புகுந்து பாலகுமரேசனை சரமாரியாக தாக்கி, அரிவாளால் வெட்டியது.
ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
இதனைப் பார்த்த ஓட்டல் கணக்காளர் ராஜமாணிக்கம் உள்ளிட்டவர்கள் அதிர்ச்சி அடைந்து தடுக்க முயன்றனர். உடனே ராஜமாணிக்கத்தையும் அந்த கும்பல் தாக்கி விட்டு தப்பி சென்றது.
படுகாயமடைந்த பாலகுமரேசன், ராஜமாணிக்கம் ஆகிய 2 பேரையும் திருச்செந்தூர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு பாலகுமரேசனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக நெல்லை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கஞ்சா விற்றதை கண்டித்ததால்...
இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் சிலர் கஞ்சா விற்றதைக் கண்டித்த ராஜமன்யபுரத்தைச் சேர்ந்த பைசோனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதனைக் கண்டித்து அப்பகுதி மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதில் பாலகுமரேசன், ஹேம்ராஜ் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
இதையடுத்து ஹேம்ராஜின் லோடு ஆட்டோவுக்கு தீ வைக்கப்பட்டது. பாலகுமரேசனின் பால்பண்ணையில் உள்ள கட்டிடத்துக்கும் தீ வைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் பாலகுமரேசன் மீது மர்மகும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியது தெரிய வந்தது.
7 பேருக்கு வலைவீச்சு
இதுதொடர்பாக தலைமறைவான ஆறுமுகநேரி ராஜமன்யபுரத்தைச் சேர்ந்த சூசைராஜ் மகன் பிரதீப், அவருடைய தம்பி பிரவீன், திலகர் மகன் அலெக்ஸ் ரூபன், விவேகானந்தன் மகன் அருள் உள்ளிட்ட 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தொண்டு நிறுவன நிர்வாகி மீது கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.