கார் வாங்கி தருவதாக சப்-இன்ஸ்பெக்டரிடம் ரூ.2¼ லட்சம் மோசடி

கார் வாங்கி தருவதாக திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டரிடம் ரூ.2¼ லட்சம் மோசடி செய்த சிவகாசி வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-08-19 19:14 GMT

சிவகாசி, 

கார் வாங்கி தருவதாக திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டரிடம் ரூ.2¼ லட்சம் மோசடி செய்த சிவகாசி வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சப்-இன்ஸ்பெக்டர்

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சீனிவாசன். இவர் தனது மகளுக்கு பழைய கார் வாங்கித்தர முடிவு செய்து இருந்தார். இதுகுறித்து பலரிடம் பேசி வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் சிவகாசி மருதுபாண்டியர் மேட்டு தெருவை சேர்ந்த ரமேஷ்குமார் என்ற வாலிபர், சென்னை தலைமை செயலகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பயன்படுத்திய பழைய கார்கள் இருப்பதாகவும் அதில் ஒரு கார் ரூ.6 லட்சத்து 75 ஆயிரத்துக்கு கிடைக்கும் என்று கூறி உள்ளார்.

ரூ.2¼ லட்சம் மோசடி

இதை உண்மை என நம்பிய சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ரூ.1 லட்சத்தை முன்பணமாக செயலி மூலம் அனுப்பியதாக கூறப்படுகிறது.

வாகனத்தின் பெயர் மாற்றம் செய்ய ரூ.25 ஆயிரத்து 750 கட்ட வேண்டும் என்று கேட்டதால் அந்த தொகையை அனுப்பி வைத்துள்ளார்.

பணத்தை அனுப்பி வைத்த சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன், கார்களின் படங்களை பார்க்க வேண்டும் என்று கூறிய போது சில கார்களின் புகைப்படங்களை சீனிவாசன் செல்போனுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைத்துள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் அந்த புகைப்படங்களை அழித்துவிட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் மீண்டும் ரமேஷ்குமார், ரூ.1 லட்சத்தை அனுப்ப கூறி உள்ளார். அதையும் சீனிவாசன் அனுப்பிவிட்டு, வாகனத்தை பார்க்க வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு மேலும் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் அனுப்பினால் தான் வாகனத்தை காண்பிப்பேன் என்று ரமேஷ்குமார் கூறி உள்ளார்.

வழக்குப்பதிவு

இதனால் சந்தேகம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் திருத்தங்கல் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கார் வாங்கித்தருவதாக சப்-இன்ஸ்பெக்டரிடம் ரமேஷ்குமார் பணமோசடி செய்திருப்பது தெரியவந்தது. அவரை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்