சென்னை விமான நிலையத்தில் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.34¾ லட்சம் அமெரிக்க டாலர்கள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.34¾ லட்சம் அமெரிக்க டாலர்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-06-19 05:01 GMT

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய் பாஸ்கர் உத்தரவின் பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.

அப்போது இலங்கை தலைநகர் கொழும்புக்கு திருச்சியை சேர்ந்த லட்சுமி கந்தசாமி (வயது 35), கனகவல்லி சுப்பிரமணி (37), திண்டுக்கலை சேர்ந்த மாரியம்மாள் சுடலைமுத்து (37) ஆகியோர் செல்ல வந்து இருந்தனர்.

அவர்கள் 3 பேரையும் சந்தேகத்தில் நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதையடுத்து அவர்களது உடைமைகளை சோதனை செய்த போது எதுவுமில்லை. தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்த போது ஆடைக்குள் வெளிநாட்டு பணத்தை மறைத்து வைத்து இருந்ததை கண்டுப்பிடித்தனா்.

3 பேரிடம் இருந்து ரூ.34 லட்சத்து 76 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இது தொடர்பாக 3 பெண்களை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்