தூண்டில் வளைவு அமைக்கக்கோரி மீனவர்கள் திடீர் வேலை நிறுத்தம்

உவரி அருகே கடல் அரிப்பால் மின்கம்பம் சாய்ந்தது. எனவே, அங்கு தூண்டில் வளைவு அமைக்கக்கோரி மீனவர்கள் திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-03-11 19:29 GMT

திசையன்விளை:

உவரி அருகே கடல் அரிப்பால் மின்கம்பம் சாய்ந்தது. எனவே, அங்கு தூண்டில் வளைவு அமைக்கக்கோரி மீனவர்கள் திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடல் அரிப்பு

நெல்லை மாவட்டம் உவரி அருகே கூடுதாழையில் 300-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த சில நாட்களாக கடல் அரிப்பு அதிகமாக இருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் கடல் அரிப்பு அதிகரித்து சுமார் 30 மீட்டர் வரையிலும் ஊருக்குள் கடல்நீர் புகுந்தது. இதனால் கடற்கரையில் இருந்த மின்கம்பம் சாய்ந்து விழுந்தது.

மீனவர்கள் வேலைநிறுத்தம்

இதுகுறித்து மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் கடற்கரையில் நாட்டுப்படகுகளை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் கடல்நீர் வீடுகளுக்குள் புகுந்து விடும் என்ற அச்சத்தால் மீனவர்கள் இரவு முழுவதும் தூங்காமல் தவித்தனர்.

இதையடுத்து கூடுதாழையில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில், அங்கு போர்க்கால அடிப்படையில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மனித சங்கிலி

இதனால் கடற்கரையில் நாட்டுப்படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. தொடர்ந்து மீனவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கடற்கரையில் வரிசையாக கைகோர்த்து மனித சங்கிலியாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் கூடுதாழையில் பங்குத்தந்தை தலைமையில் ஊர் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி கூடுதாழையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றமும், பரபரப்பும் நிலவுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்