ஆக்கிரமிப்பை அகற்றி குளத்தை மீட்க வேண்டும்:கலெக்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை

ஜி.கல்லுப்பட்டியில் ஆக்கிரமிப்பை அகற்றி குளத்தை மீட்க வேண்டும் என்று கலெக்டரிடம் மக்கள் மனு கொடுத்தனர்.

Update: 2022-12-26 18:45 GMT

குறைதீர்க்கும் கூட்டம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். கூட்டத்தில் மொத்தம் 321 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு பொதுச்செயலாளர் ஜேம்ஸ் கஸ்பார் ராஜ் தலைமையில் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், "2015-ம் ஆண்டு முதல் நடப்பு மாதம் வரை வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படியை நிலுவையுடன் வழங்க வேண்டும். போக்குவரத்து கழகங்களில் கோர்ட்டு தீர்ப்புகளை முறையாக அமல்படுத்த வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

குள்ளப்புரத்தை சேர்ந்த மக்கள் ஆதார் கார்டுடன் வந்து மனு கொடுத்தனர். அதில், "கோவில்களுக்கு செல்லும் பாதையில் நடந்து செல்லக்கூடாது என்று சாதிய பாகுபாடு காட்டி, இருதரப்பினர் இடையே மோதலை உருவாக்க முயற்சி செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

ஆக்கிரமிப்பு

கெங்குவார்பட்டி அருகே உள்ள ஜி.கல்லுப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் கலெக்டர் முரளிதரனிடம் கொடுத்த மனுவில், ஜி.கல்லுப்பட்டி கிராம மக்கள் பயன்படுத்தி வந்த சோனைபிள்ளை குளத்தில் தான் முன்பு, எங்கள் கிராமத்தை சேர்ந்த மக்கள் தண்ணீர் எடுத்து வந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் நிலத்தை விலைக்கு வாங்கிய நபர், குளத்தில் இருந்த மரங்களை வெட்டி விட்டார். குளத்தையும் விலைக்கு வாங்கிவிட்டதாக கூறுகிறார். எனவே குளத்தை யார் ஆக்கிரமிப்பு செய்து இருந்தாலும் உடனடியாக அகற்றி, குளத்தை மீட்டு மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். என்று கூறியிருந்தனர்.

மருத்துவ குல சவரத் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் ஆனந்தன் தலைமையில் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், "முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் இலவசமாக தொழில் கருவிகள் அடங்கிய பெட்டகங்கள் வழங்கப்பட்டு வந்தன. தற்போது இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனவே மீண்டும் நவீன காலத்துக்கு ஏற்றதுபோல் தொழில் கருவிகளை வழங்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்