ஆண்டிப்பட்டி தாலுகா பகுதியில் வறட்சியை போக்கமூலவைகையில் அணை கட்டும் திட்டம் நிறைவேற்றப்படுமா?விவசாயிகள் எதிர்பார்ப்பு

ஆண்டிப்பட்டி தாலுகா பகுதியில் வறட்சியை போக்குவதற்கு மூலவைகை ஆற்¬றில் அணை கட்டும் திட்டம் நிறைவேற்றப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்

Update: 2023-01-23 18:45 GMT

தேனி மாவட்டத்தில் வறட்சியான பகுதிகள் நிறைந்த இடங்களாக ஆண்டிப்பட்டி தாலுகா பகுதிகள் உள்ளன. பசுமையான தேனி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் ஆண்டு முழுவதும் விவசாயம் நடக்கிறது. ஆனால், ஆண்டிப்பட்டி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் பெரும்பாலான நிலங்கள் வானம் பார்த்த பூமியான மானாவாரி நிலங்களாக உள்ளன.

மூலவைகை ஆறு

ஒரு காலத்தில் அவையும் நெல், கரும்பு, வாழை விளைந்த பசுமையான நிலங்கள் தான். மழைப்பொழிவு சீராகவும், ஆண்டு முழுவதும் வைகை ஆற்றில் நீரோட்டமும் இருந்த காலகட்டத்திலும் அது சாத்தியமானது.

ஆனால், மூலவைகை ஆறு பாயும் ஆண்டிப்பட்டி தாலுகா பகுதிகள் தற்போது கரும்புள்ளி வட்டாரமாக திகழ்கிறது. மூலவைகை ஆறு என்பது வைகை அணையின் முக்கிய நீராதாரமாக திகழ்கிறது. வருசநாடு மலைப்பகுதியில் உற்பத்தியாகி, தாண்டிக்குளம், தும்மக்குண்டு, வருசநாடு, தங்கம்மாள்புரம், மயிலாடும்பாறை, துரைச்சாமிபுரம், கண்டமனூர், அம்மச்சியாபுரம் வரை சுமார் 70 கிலோமீட்டர் தூரம் மூலவைகை ஆறு பாய்கிறது. பின்னர் இந்த ஆறு குன்னூர் அருகே முல்லைப்பெரியாற்றுடன் சங்கமித்து, வைகை அணையை சென்றடைகிறது.

அணை கட்டும் திட்டம்

ஆண்டிப்பட்டி தாலுகா பகுதிகளில் உள்ள விளை நிலங்களை செழிப்படையச் செய்ய வேண்டும் என்றால் மூலவைகை ஆற்றில் அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக விவசாயிகளால் எழுப்பப்பட்டு வருகிறது. அரசியல்கட்சிகளின் தேர்தல் வாக்குறுதியிலும் இந்த அணை கட்டும் திட்டம் குறித்த வாக்குறுதி இடம்பெற்று வருகிறது.

ஆங்கிலேயர்கள் காலத்திலேயே மூலவைகை பகுதியில் அணை கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு நீர்மேலாண்மை பணிகளை மேற்கொள்வதற்காக ஜமீன்தாரர்களுக்கும் ஆங்கிலேயே அரசு வழிகாட்டுதல்களை வழங்கியதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

1984-85-ம் ஆண்டு காலகட்டத்தில் எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது மூலவைகையில் அணை கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. வருசநாடு மலைப்பகுதியில் தாண்டிக்குளம் என்ற இடத்தில் இதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு மூலவைகை ஆற்றின் குறுக்கே அணை கட்டி, கணேசபுரம், விருமானூத்து, வேலப்பர்கோவில், வரதராஜபுரம், அரளியூத்து ஓடைகள் வழியாக கண்மாய்களில் தண்ணீர் தேக்கி பாசனத்துக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டது. ஆனால், சில தொழில்நுட்ப காரணங்களால் இந்த திட்டம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

கரும்புள்ளி வட்டாரம்

அதேநேரத்தில், தங்கம்மாள்புரம், துரைச்சாமிபுரம் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்ட தடுப்பணைகளில் இருந்து கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், நீர்வரத்து வாய்க்காலை விடவும் மேட்டுப்பாங்கான இடத்தில் கண்மாய்கள் உள்ளதாலும், வாய்க்காலில் பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டதாலும் கண்மாய்களுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் உள்ளது. இதனால், ஆண்டிப்பட்டி தாலுகாவில் உள்ள சுமார் 23 கண்மாய்களில் தண்ணீர் தேக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

இதுபோன்ற காரணங்களால் பாசன கிணறுகளும் வறண்டு போயின. ஆண்டிப்பட்டி தாலுகா பகுதிகளில் உள்ள சுமார் 1,800 பாசன கிணறுகள் மற்றும் 600-க்கும் மேற்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் வறண்டு கிடக்கின்றன. இதனால், இந்த பாசன கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகள், கண்மாய்கள் போன்றவற்றை நம்பியுள்ள சுமார் 15 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தரிசாக மாறி வருகிறது. இதே நிலை நீடித்தால் பெரும்பகுதி தரிசாகும் நிலை உள்ளது.

நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் இந்த தாலுகா பகுதி கரும்புள்ளி வட்டாரமாக அறிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்ட அந்த கரும்புள்ளி விலக வேண்டும் என்றால், ஆண்டிப்பட்டி வட்டாரத்தில் நிலத்தடி நீரை பெருக்கவும், கண்மாய்களுக்கு தண்ணீர் சீராக கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு மூலவைகை அணை திட்டத்தை செயல்படுத்தவும், ஏற்கனவே தடுப்பணைகளில் இருந்து கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வாய்க்கால்களை சரிசெய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

குடிநீர் தட்டுப்பாடு

மூலவைகையில் அணை கட்டும் திட்டம் தொடர்பாக விவசாயிகள் தங்களின் கருத்துகளை தெரிவித்தனர். அதன் விவரம் வருமாறு:-

சின்னன், வருசநாடு :- வைகை அணையில் முன்பு ஆண்டு முழுவதும் தண்ணீர் ஓடியது. ஆனால், தற்போது ஆண்டின் சில நாட்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதன்பிறகு ஓரிரு மாதங்களில் நீர்வரத்து நின்று விடுகிறது. கோடை காலங்களில் மூலவைகை ஆறு பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குடிப்பதற்கே தண்ணீர் கிடைக்காத போது, விவசாயத்தை பற்றி யோசிக்கவே முடியாது. விளை நிலங்கள் பெரும்பாலும் தரிசாக மாறி வருகிறது. மூலவைகையில் அணை கட்டும் திட்டத்தை செயல்படுத்தினால், தண்ணீர் தேக்கி வைத்து பயன்படுத்த முடியும். இதன் மூலம் விவசாய நிலங்களும் பயன்பெறும்.

முருகன், தும்மக்குண்டு :- எம்.ஜி.ஆர். ஆட்சியில் இருக்கும் போதே இந்த அணை கட்டும் திட்டத்தை செயல்படுத்துவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அறிவிப்பு, ஆய்வு என்ற நிலையில் நின்று விட்டது. அப்போதைய தொழில்நுட்ப முறையில் அணை கட்ட திட்டமிடப்பட்டது. தற்போது தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்துள்ளது. தற்போதைய சூழலில் அணை கட்டுவது எளிதானது. அரசு மனசு வைத்தால் மூலவைகையில் அணை கட்டப்படும். அதன் மூலம் விவசாயமும், மக்களுக்கான குடிநீர் ஆதாரமும் பெருகும்.

அணை கட்ட வேண்டும்

வனராஜா, வாலிப்பாறை :- ஒவ்வொருமுறை தேர்தல் வரும்போதும், மூலவைகையில் அணை கட்டும் திட்டத்தை செயல்படுத்துவோம் என்று வேட்பாளர்கள் சொல்கிறார்கள். ஆனால், வெற்றி பெற்றபின்பு அணை கட்டுவதற்கான பணிகள் எதுவும் நடப்பதில்லை. இது விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றமாக உள்ளது. தண்ணீர் வரத்து இல்லாததால் கண்மாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகிறது. இதே நிலை நீடித்தால் கண்மாய்களே இல்லாமல் போய்விடும். பெரிய அளவில் அணை கட்ட முடியாவிட்டாலும், விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பயன்படும் வகையில் சிறிய அளவிலான அணையாவது கட்டிக் கொடுக்கலாம்.

அங்குசாமி, கண்டமனூர் :- வருசநாடு பகுதியில் மழை பெய்தால் வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். வைகை ஆற்று வெள்ளத்தில் யானையும் உருண்டு வரும் என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு வெள்ளம் வரும். எனது சிறு வயதில் கண்டமனூர் மூலவைகை ஆற்றில் கோடை காலத்திலும் தண்ணீர் வந்தது. ஆனால், தற்போது மழைக் காலம் ஓய்ந்த ஓரிரு மாதங்களில் தண்ணீர் ஓட்டம் இல்லை. மூலவைகையில் அணை கட்டி தண்ணீரை தேக்கி வைத்து, தேவைக்கு ஏற்ப வெளியேற்றினால் வைகை ஆற்றில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஓட்டம் இருக்கும். அதன் மூலம் குடிநீர் ஆதாரம் பெருகுவதோடு, விவசாயத்துக்கும் சீராக தண்ணீர் கிடைக்கும். அதற்கான முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்