போதைப் பொருட்கள் பயன்பாடு, விற்பனையை தடுக்கபோலீஸ் அதிகாரிகள் மாலை நேரத்தில் கட்டாயம் ரோந்து செல்ல வேண்டும்:மாவட்ட சூப்பிரண்டு உத்தரவு

போதைப் பொருட்கள் பயன்பாடு, விற்பனையை தடுக்க போலீஸ் அதிகாரிகள் மாலை நேரத்தில் கட்டாயம் ரோந்து செல்ல வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

Update: 2023-01-28 18:45 GMT

தேனி மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து போலீஸ் துணை சூப்பிரண்டுகள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்களுக்கும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே பல்வேறு அறிவுரைகள் வழங்கியுள்ளார். இதுதொடர்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே நேற்று ஒரு உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி, போலீஸ் அதிகாரிகள் மாலை நேர ரோந்து பணியை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். ரோந்து பணி மேற்கொள்வதை தவிர்க்கக்கூடாது. சட்டவிரோதமாக சில்லறையில் மதுவிற்பனை, போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோர், அவற்றை பயன்படுத்துவோர், அவற்றுக்கு துணையாக செயல்படுபவர்கள் என அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விபத்து தடுப்பு நடவடிக்கையாக, மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதை தீவிரப்படுத்த வேண்டும். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் தினமும் மாலை நேர ரோந்து பணியில் ஈடுபடுவதை அந்தந்த உட்கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டுகள் கண்காணிக்க வேண்டும். துணை சூப்பிரண்டுகளும் மாலை நேரத்தில் ரோந்து மேற்கொள்ள வேண்டும். ரோந்து செல்லாத சப்-இன்ஸ்பெக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு தனது உத்தரவில் குறிப்பிட்டு உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்