தொகுப்பூதியம் பெறும் டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

தொகுப்பூதியம் பெறும் டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-09-10 12:22 GMT

கோவில்பட்டி:

தொகுப்பூதியம் பெறும் டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் தங்களது 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27-ந் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதுதொடர்பாக மதுரை மண்டல அளவில் கோவில்பட்டி ஆனந்தா விடுதியில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநில துணைதலைவர் எம். மரகதலிங்கம் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட தலைவர் கே. வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் சரவணன் கலந்துகொண்டு பேசினார். இம்மாதம் 27-ம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மதுரை மண்டலம் சார்பில் 500 பேர் கலந்து கொள்ள முடிவு எடுக்கப்பட்டது.

தீர்மானம்

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

2021- 22-ம் ஆண்டுக்கான போனஸ் 30 சதவீதம் வழங்க வேண்டும். தொழிற்சங்க சட்டங்களின்படி 480 நாட்கள் பணி புரிந்தால், பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பு ஊதியத்தில் பணி புரிபவர்களை பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற தேர்தல் உறுதிமொழியை தமிழக முதல்-அமைச்சர் நிறைவேற்ற வேண்டும்.

கடந்த பிப்ரவரி 21-ந் தேதி கூட்டத்தில், பொது மேலாளர் தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உறுதி அளித்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். 19 ஆண்டுகளாக தொகுப்பூதியம் பெற்று வரும் டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் தூத்துக்குடி, தென்காசி, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட தலைவர்கள் சத்தியமூர்த்தி, சுரேஷ்குமார், கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் ராமர் பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்