பிறமொழியை கற்றுக் கொள்வதற்கு புதிய கல்வி கொள்கை அவசியம்; புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு

பிற மொழியை கற்றுக் கொள்வதற்கு புதிய கல்விக் கொள்கை அவசியம் என புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Update: 2022-12-11 18:45 GMT

பிற மொழியை கற்றுக் கொள்வதற்கு புதிய கல்விக் கொள்கை அவசியம் என புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

பாரதியார் பிறந்தநாள்

தூத்துக்குடியில் தாமிரபரணி தமிழ் வனம் மற்றும் பாரதியார் இலக்கிய பேரவை சார்பில் பாரதியாரின் 141-வது பிறந்தநாள் விழா மற்றும் தேசிய மொழிகள் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் தெலுங்கானா மாநில கவர்னரும், புதுச்சேரி துணை நிலை கவர்னருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஜி 20 மாநாட்டை பாரத நாடு தலைமை ஏற்று நடத்துவதன் மூலம் பாரத நாடு உலகிற்கு ஒரு வழிகாட்டியாக விளங்கப் போகிறது. பாரதியார் எல்லா மொழிகளையும் கற்றுக் கொண்டார். அவர் வழியில் இன்று தேசிய மொழிகள் தினம் கொண்டாடப்படுகிறது. பாரதி யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதானது எங்கும் காணோம் என்று கூறினார். எனவே தமிழ் மொழியை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்றால் வேறு மொழியை கற்றுக் கொள்ள வேண்டும்.

பிற மொழியை கற்றுக் கொள்வதற்கு புதிய கல்விக் கொள்கை அவசியம் ஆகும். புதிய கல்விக் கொள்கையில் தாய்மொழி பாடத்தில் பாடங்கள் கற்பிக்கப்படும் 3-வது மொழியாக வேறு மொழியை கற்பிக்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.

அரசியல் செய்யக்கூடாது

அரசியல் காரணங்களுக்காக இன்றைய மாணவர்களுக்கு வரக்கூடிய வாய்ப்பை தட்டிப் பறிக்கக்கூடாது. பாடத்திட்டங்களை வைத்து அரசியல் செய்யக்கூடாது. பாரதி சாமானியர் அல்ல. இவரை பாதுகாக்க வேண்டும் என காந்தியே சொல்லி உள்ளார். ஆனால் பாரதிக்கு தமிழகத்தில் அங்கீகாரம் கிடைக்கவில்லை. புதுச்சேரியில் பாரதி சிலை வைக்க வேண்டும். எங்கெங்கும் காணினும் சக்தி பிறக்குதடா என்று பாடிய பாரதியின் பாடல்கள் கடற்கரை ஓரத்தில் இசைத்துக் கொண்டே இருக்க வேண்டும். உலகிற்கே குருவாக இந்தியா விளங்கும் என்று தீர்க்கதரிசனமாக பாரதி கூறியதால் தான் இன்று இந்தியா உலக நாடுகளுக்கு தடுப்பூசியை கொடுத்து குருவாக விளங்கி உள்ளது. ஜி 20 மாநாடு நடத்துவதன் மூலமாக உலகில் எல்லோரும் சிறப்பான நிலையை அடைவோம்.

இன்று நாட்டில் 75 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு பாரத திருநாடு பொருளாதாரத்தில் 3-வது வளர்ந்து வரும் நாடாக உள்ளது. மருந்துகள் தயாரிப்பதிலும், தடுப்பூசிகள் தயாரிப்பதிலும், கவச உடைகள் தயாரிப்பதிலும் இந்தியா முன்னிலை வைக்கிறது. பாரதியை இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும். அவருக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும். அவருடைய வீடு புதுப்பிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் பாரதி எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி, மகாகவி பாரதியார் இலக்கிய பேரவை தலைவர் ஏ. ஆர்.லட்சுமணன், தாமிரவருணி தமிழ்வனம் புரவலர் டாக்டர் அருணாச்சலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சாமி தரிசனம்

பின்னர் இரவில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்