மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த வேண்டும்- ராமதாஸ்

மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.;

Update: 2022-12-06 06:05 GMT

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் மூன்றாம் வகுப்பு மாணவர்களில் 20 விழுக்காட்டினரால் தான் தமிழ் சொற்களை புரிந்து கொள்ள முடிகிறது; 23 விழுக்காட்டினரால் தான் அடிப்படை கணிதத்தை மேற்கொள்ள முடிகிறது என ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது.

தமிழக மாணவர்களின் கற்றல் குறைபாடு நீண்டகாலமாக நீடிக்கும் பிரச்சினை தான் என்றாலும், அதை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படாதது கவலையளிக்கிறது. கல்வி கற்பிப்பதன் நோக்கம் கற்றல் திறன் குறைவாக இருப்பவர்களையும் கல்வியில் சிறந்தவர்களாக முன்னேற்றுவது தான். ஆனால், அந்த அதிசயம் பெரும்பாலான காலங்களில் நடைபெறுவதில்லை என்பது தான் வேதனையான உண்மை.

இயல்பாகவே கற்றல் திறன் அதிகமாக உள்ள மாணவர்கள் நன்றாக படித்து முன்னேறுகின்றனர். பள்ளிகள் அவர்களுக்கானவை அல்ல. 10 சதவீதம் மதிப்பெண் எடுக்கத் தடுமாறும் மாணவர்களை 60 சதவீதம் எடுக்கும் நிலைக்கு முன்னேற்றுவதும், 50 சதவீதம் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை 90 சதவீதத்துக்கும் கூடுதலான மதிப்பெண்களை எடுக்கும் நிலைக்கு உயர்த்துவதும் தான் அரசு பள்ளிகளின் நோக்கமாக இருக்க வேண்டும்.

அப்போது தான் தமிழகம் கல்வியில் சிறக்கும். ஆனால், தமிழ்நாட்டு பள்ளிகள் இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதில்லை என்பது தான் வேதனையான உண்மை. இதற்கான முதன்மைக் காரணம் கற்றல் கட்டமைப்பு வலிமையாக இல்லாததும், ஆசிரியர்கள் பற்றாக்குறையும் தான்.

அண்மையில் தமிழக அரசின் தொடக்கக்கல்வித்துறை வெளியிட்ட புள்ளிவிவர அறிக்கை ஒன்றின்படி 3,800 தொடக்கப்பள்ளிகளில் 5 வகுப்புகளைக் கையாள்வதற்கு தலா ஓர் ஆசிரியர் மட்டுமே உள்ளனர். மீதமுள்ள 25,618 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் சராசரியாக ஒரு பள்ளிக்கு 2.5 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். 8-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு 2 முதல் 3 ஆசிரியர்களை மட்டும் வைத்துக்கொண்டு எவ்வாறு தரமான கல்வியை வழங்க முடியும்?

மாணவர்களின் கற்றல் திறனை ஊக்குவிக்க தமிழக அரசின் சார்பில் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், அவை மட்டுமே போதாது. அரசு பள்ளிகளின் கட்டமைப்பை வலுப்படுத்துவதன் மூலமே மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த முடியும்.

அதைக் கருத்தில் கொண்டு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது மட்டுமின்றி, வகுப்புக்கு ஓர் ஆசிரியர் வீதம் நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டமைப்பு மேம்பாடு மற்றும் ஆசிரியர்கள் நியமனத்தை ஓர் இயக்கமாக கருதி மேற்கொள்ள தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்