பாதயாத்திரை பக்தர்களுக்கு உதவ 49 வாகனங்களில் போலீசார் ரோந்து

பழனி முருகன் கோவிலுக்கு வரும் பாதயாத்திரை பக்தர்களுக்கு உதவும் வகையில் 49 வாகனங்களில் போலீசார் ரோந்து செல்கின்றனர்.

Update: 2023-02-02 17:17 GMT

பாதயாத்திரை பக்தர்கள்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் பழனியும் ஒன்றாகும். இந்த பழனி முருகன் கோவிலில் நாளை (சனிக்கிழமை) தைப்பூச திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள், பழனிக்கு வந்த வண்ணம் இருக்கின்றனர். அதிலும் பெரும்பாலான மக்கள் விரதம் இருந்து பாதயாத்திரையாக பழனிக்கு வருகின்றனர்.

நத்தம் சாலை, மதுரை சாலை, திருச்சி சாலை, கரூர் சாலை, வேடசந்தூர் சாலை, திருப்பூர் சாலை என அனைத்து சாலைகள் வழியாக பக்தர்கள் சாரை, சாரையாக பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். மேலும் தைப்பூச திருவிழாவுக்கு ஒரு நாளே இருப்பதால் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி இருக்கிறது. இவ்வாறு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் தனி பாதை, சாலை ஓரத்தில் நடந்து செல்கின்றனர்.

போலீஸ் ரோந்து

எனினும் ஒருசிலர் விபத்தில் சிக்கி கொள்வது வழக்கமாக உள்ளது. எனவே பாதயாத்திரை பக்தர்களுக்கு இரவில் வாகன ஓட்டிகள் எளிதில் அடையாளம் காணும் வகையில் ஒளிரும் குச்சிகள் வழங்கப்படுகின்றன. மேலும் பக்தர்களின் பாதயாத்திரையை முறைப்படுத்தவும், பக்தர்களுக்கு உதவி செய்யவும் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின்பேரில் ரோந்து போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அதன்படி பக்தர்கள் பாதயாத்திரை செல்லும் பாதைகளில் 38 இருசக்கர வாகனங்கள், 11 வேன்களில் போலீசார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ரோந்து சென்று வருகின்றனர். அப்போது பக்தர்கள் பாதுகாப்பாக பாதயாத்திரை செல்வதற்கு வசதியாக வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்துகின்றனர். மேலும் சாலையின் ஓரமாக பாதுகாப்பாக நடந்து செல்ல வேண்டும். இரவு 10 மணிக்கு மேல் பாதயாத்திரை செல்வதை தவிர்க்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்