அவசர காலங்களில் மீனவர்களுக்கு உதவ'மரைன் ஆம்புலன்ஸ்' தொடங்க பரிசீலனை:மத்திய மீன்வளத்துறை மந்திரி தகவல்
அவசர காலங்களில் மீனவர்களுக்கு உதவ ‘மரைன் ஆம்புலன்ஸ்’ தொடங்க பரிசீலனை செய்து வருவதாக மத்திய மீன்வளத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர்:
அவசர காலங்களில் மீனவர்களுக்கு உதவ 'மரைன் ஆம்புலன்ஸ்' தொடங்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக மத்திய மீன்வளத்துறை மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா பேசினார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மத்திய மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா, மத்திய இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் நேற்று சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் கோவில் விருந்தினர் மாளிகையில் மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா நிருபர்களிடம் கூறியதாவது:-
மரைன் ஆம்புலன்ஸ்
மீனவர்களின் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி தனி அமைச்சகத்தை ஏற்படுத்தியுள்ளார். மீனவர்களின் குறைகளை அறிவதற்காக 'சாகர் பரிக்ரமா' என்ற யாத்திரையை குஜராத் மாநிலத்தில் தொடங்கி, பல்வேறு மாநிலங்களின் வழியாக சென்று மீனவர்களிடம் குறைகள், ஆலோசனைகளை கேட்டறிந்து வருகிறோம்.
மீன்வளத்துறைக்கு மத்திய அரசு கடந்த 9 ஆண்டுகளில் ரூ.38 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். மீன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் உலக அளவில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. இறால் ஏற்றுமதியில் 2-வது இடத்தில் உள்ளோம். அவசர காலங்களில் மீனவர்களுக்கு உதவ மரைன் ஆம்புலன்ஸ் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. மீனவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதற்காக ரூ.11 கோடி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மீன்வளத்துறை மேம்பாட்டிற்கு ரூ.1,800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதல் முறையாக ரூ.127 கோடியில் கடல்பாசி சிறப்பு பூங்கா, ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைக்கப்பட உள்ளது. இதன் அடிக்கல் நாட்டு விழா இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. மேலும் ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்கு தலா ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்பில் 50 படகுகள் கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகப்பட்டினம் போன்ற மாவட்ட மீன்வர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதில் மீனவர்களுக்கு ரூ.60 லட்சம் மானியமாக வழங்கப்படும்.
கச்சத்தீவு
கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது காங்கிரஸ், தி.மு.க. அரசுகள்தான். கச்சத்தீவை மீட்பது என்பது நிர்வாக ரீதியாக கலந்து ஆலோசித்துதான் கூறமுடியும். கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தில் மீன்வளம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு எந்தவிதமான தடையும் இருக்க கூடாது என்பதற்காக, நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தை புறக்கணித்த சூழ்நிலையிலும், மீனவர்களின் நலனுக்காக இந்த புதிய சட்டத்தை நிறைவேற்றி நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினம் கடற்கரையில் மீனவர்களிடம் மத்திய மந்திரிகள் பர்ஷோத்தம் ரூபாலா, எல்.முருகன் ஆகியோர் குறைகளை கேட்டனர்.
முன்னதாக திருச்செந்தூர் கோவிலுக்கு வந்த மத்திய மந்திரிகளை உதவி கலெக்டர் குருச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். கோவில் சண்முகவிலாச மண்டபத்தில் மத்திய மந்திரிகளுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா, பா.ஜ.க. மாநில வர்த்தக அணி தலைவர் ராஜகண்ணன், தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
நலத்திட்ட உதவிகள்
பின்னர் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்களுக்கு மத்திய மந்திரிகள் நலத்திட்ட உதவிகள் வழங்கி கலந்துரையாடினர்.
நிகழ்ச்சியில் மீனவர்கள், தங்கு கடல் மீன்பிடித்தலுக்கு அனுமதிக்க வேண்டும், மீன்பிடி தடைக்காலத்தின்போது கேரள விசைப்படகுகள் தமிழக கடற்கரைக்கு வராமல் தடுக்க வேண்டும், மீன்பிடி தடைக்காலத்தை நவம்பர், டிசம்பர் மாதத்துக்கு மாற்ற வேண்டும். ஆழ்கடல் மீன்படித்தலுக்கான படகுகளுக்கு உரிய அனுமதி வழங்க வேண்டும். கடல் ஆம்புலன்சு வசதி ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
தூத்துக்குடி உதவி கலெக்டர் கவுரவ்குமார், மீன்வளத்துறை இணை இயக்குனர் அமல்சேவியர், உதவி இயக்குனர்கள் மோகன்ராஜ், விஜயராகவன், தாசில்தார் பிரபாகரன் மற்றும் மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.