வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக150 பேரிடம் ரூ.10 லட்சம் துணிகர மோசடி; வாலிபர் சிக்கினார்

தூத்துக்குடியில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக 150 பேரிடம் ரூ.10 லட்சம் துணிகர மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-01-26 18:45 GMT

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக 150 பேரிடம் துணிகரமாக ரூ.10 லட்சம் மோசடி செய்த வாலிபரை தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.

வேலைவாய்ப்பு

தூத்துக்குடி மில்லர்புரத்தை சேர்ந்தவர் ஷேக்முகைதீன். இவருடைய மகன் முகமது அப்பாஸ் (36). இவர் கடந்த 27.1.2022 அன்று தூத்துக்குடியில் வைத்து வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என்றும், அதில் அபுதாபியில் உள்ள ஒரு கம்பெனிக்கு வேலைக்கு ஆள் எடுப்பதாகவும் துண்டுபிரதிகள் மூலம் விளம்பரப்படுத்தி உள்ளார். அதன்பேரில் அந்த விளம்பரத்தில் உள்ள தொலைபேசி எண்ணுக்கு தூத்துக்குடி டேவிஸ்புரம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த பெரியசாமி மகன் காமராஜ் (42) மற்றும் சிலர் தொடர்பு கொண்டு பேசி உள்ளனர்.

அவர்களிடம் பேசிய முகமது அப்பாஸ் வெளிநாடு செல்வதற்காக தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் தான் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறி உள்ளார். அந்த மருத்துவமனையில் கட்டணம் செலுத்துவதற்காக ஒரு நபருக்கு ரூ.7 ஆயிரத்து 500 வீதம் 16 பேரிடம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரமும், தூத்துக்குடி தவிர பிற மாவட்டங்களைச் சேர்ந்த 8 பேரிடம் தலா ரூ.20 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் ஆக மொத்தம் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் பெற்று உள்ளார். மேலும், காமராஜ் உள்ளிட்ட சிலரிடம் போலியான உறுதிப்படுத்தும் கடிதம் கொடுத்து விரைவில் வெளிநாடு அனுப்பி வைப்பதாக முகமது அப்பாஸ் கூறி உள்ளார்.

மோசடி

ஆனால், அவர் வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதையடுத்து காமராஜ் கடந்த 21.06.2022 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் மாவட்ட குற்ற பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த முகமது அப்பாசை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், இதேபோன்று பல்வேறு இடங்களில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 150 பேரிடம் பணம் வசூல் செய்து ரூ.10 லட்சத்துக்கு மேல் பணம் மோசடி செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக மாவட்ட குற்ற பிரிவு போலீசார் அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்