பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும்
பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும் என்று விதைப்பரிசோதனை அலுவலர் தெரிவித்தார்.
பாரம்பரிய ரகங்கள்
தேனி விதைப்பரிசோதனை அலுவலர் மகாலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
நோயில்லா வாழ்வு வாழ நாம் மீண்டும் பாரம்பரிய விவசாயத்துக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். பாரம்பரிய நெல் ரகங்கள் வறட்சியையும், வெள்ளத்தையும் தாங்கி வளரக்கூடிய தன்மை உடையது. பெரும்பாலானவை பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவை. விதைப்பு மற்றும் நடவுக்கும் உகந்தவை. இது 150 செ.மீ. முதல் 162 செ.மீ. வரை வளரக்கூடியது, ஆகையால், அதிக சத்தான கால்நடைத் தீவனம் கிடைக்கும்.
மேலும் இவை எளிதில் ஜீரணமாகக்கூடியவை. மலச்சிக்கலை நீக்குவதோடு, நரம்புகளை பலப்படுத்துதல் போன்ற பல்வேறு மருத்துவக் குணங்களை உள்ளடக்கியது. அதிக நார்ச்சத்தும், புரதசத்தும் நிறைந்தது. மேலும் இவை நிறம், மணம், மரபுவழி நன்மைகளைக் கொண்டவை. விவசாயிகள் இது போன்ற பாரம்பரிய ரகங்களை சாகுபடி செய்தால் மக்கள் மத்தியில் அவற்றை வாங்கி பயன்படுத்தவும் விழிப்புணர்வு ஏற்படும். அதுமட்டுமல்லாமல் பாரம்பரிய நெல் ரகங்கள் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லப்படும்.
முன்வர வேண்டும்
பாரம்பரிய நெல் ரகங்களான பூங்கார் என்பது புயல், வெள்ளம், வறட்சி ஆகியவற்றை தாங்கி வளரும். மேலும், உடம்பில் சுரக்கும் கெட்ட நீரினை வெளியேற்றும் தன்மை கொண்டது. சிவப்பு கவுனி அரிசி, இதயத்தைப் பலப்படுத்தி, ரத்த ஓட்டத்தை சீர்படுத்தும். குள்ளக்கார் அரிசி உடல்பருமனை குறைக்க உதவுகிறது. தூயமல்லி ரகமானது பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. குடவாழை குடலை வாழ வைப்பதால் இப்பெயர் பெற்றது, சர்க்கரை நோய் வராமல் தடுக்கும், செரிமான பிரச்சினை. வயிறு பிரச்சினையைக் குணப்படுத்தும்.
கருடன் சம்பா அரிசி வடிகால் வசதியுடைய நிலங்களில் நன்றாக வளரும். கருப்பு கவுனி அரிசி புற்றுநோய் எதிர்ப்பையும், இன்சுலின் சுரப்பையும் மேம்படுத்துகிறது. ஊடலில் இருந்து நச்சுத்தன்மையுள்ள கழிவுகளை வெளியேற்றுவதோடு, நார்ச்சத்து மற்றும் 18 அமினோ அமிலங்கள் உள்ளன. குழியடிச்சான் அரிசி உப்பு மண்ணிலும், வறட்சி நிலையைத்தாண்டியும் வளரும். பெண்களின் ஆரோக்கியத்திற்கு உகந்தது. எனவே, இதுபோன்ற பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்வதற்கு விவசாயிகள் ஆர்வத்துடன் முன்வர வேண்டும். மேலும், இதுபோன்ற நெல் ரகங்களை விதைப்பதற்கு முன் விதையின் முளைப்புத்திறன் அறிந்து விதைப்பு செய்வதன் மூலம் அதிக மகசூல் ஈட்டலாம். விதை முளைப்புத்திறன் அறிய தேனி விதைப்பரிசோதனை நிலையத்தை அணுகலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.