விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த பந்தல் காய்கறி விவசாயிகள் கூட்டமைப்பு உருவாக்கம்- குறைந்த விலைக்கு கொள்முதல் செய்வதாக புகார்

விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த பந்தல் விவசாயிகள் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. மேலும் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு பந்தல் காய்கறிகள் கொள்முதல் செய்வதாக புகார் தெரிவித்தனர்.

Update: 2022-07-02 15:20 GMT

பொள்ளாச்சி

விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த பந்தல் விவசாயிகள் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. மேலும் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு பந்தல் காய்கறிகள் கொள்முதல் செய்வதாக புகார் தெரிவித்தனர்.

ஆலோசனை கூட்டம்

பொள்ளாச்சி, ஆனைமலை, நெகமம், கிணத்துக்கடவு, சுல்தான்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பந்தல் காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது. இந்த நிலையில் பொள்ளாச்சி பகுதிகளில் பந்தல் காய்கறிகளை குறைந்த விலைக்கு தோட்டங்களுக்கு சென்று வியாபாரிகள் கொள்முதல் செய்வதாக தெரிகிறது. இதே ஒட்டன்சத்திரம் போன்ற மற்ற மார்க்கெட்டுகளில் விலை அதிகமாக உள்ளது.

இதன் காரணமாக விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த பொள்ளாச்சி அருகே அம்பராம்பாளையம் சுங்கத்தில் பந்தல் காய்கறிகள் சாகுபடி செய்யும் விவசாயிகள் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. கூட்டத்தில் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்துதல், காய்கறிகள் கொள்முதல் செய்தல் மற்றும் அனைத்து விவசாயிகளையும் ஒருங்கிணைத்து வாட்ஸ்-அப் குழு உருவாக்குதல் உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் பந்தல் காய்கறி விவசாயிகள் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதுகுறித்து பந்தல் காய்கறி விவசாயிகள் கூறியதாவது:-

விவசாயிகளுக்கு நஷ்டம்

பொள்ளாச்சி, திம்மங்குத்து, ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், பூசாரிபட்டி, கிணத்துக்கடவு, செஞ்சேரிமலை உள்பட பல்வேறு பகுதிகளில் பந்தல் காய்கறிகளான பாகற்காய், பீர்க்கன்காய், புடலைங்காய், சுரைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது. பொள்ளாச்சி பகுதிகளில் மட்டும் 2 ஆயிரம் ஏக்கரில் பந்தல் காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது. சுமால் 600 முதல் 700 விவசாயிகள் பந்தல் சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பொள்ளாச்சி பகுதியில் பாகற்காய் கிலோ ரூ.10-க்கு விவசாயிகளிடம் இருந்து வாங்கப்படுகிறது. இதே ஒட்டன்சத்திரத்தில் கிலோ ரூ.15 வரை விவசாயிகளிடம் இருந்து பாகற்காய் கொள்முதல் செய்யப்படுகிறது. பாகற்காய் கிலோவிற்கு உற்பத்தி செலவு ரூ.15 வரை ஆகிறது. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. விலை குறித்த விவரம் தெரியாததால் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு காய்கறிகளை கொள்முதல் செய்கின்றனர்.

வாட்ஸ்-அப் குழு

கிலோ ரூ.10-க்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் பந்தல் காய்கறிகளை வியாபாரிகள் அதிகபட்சமாக கிலோ ரூ.40 வரை விற்பனை செய்கின்றனர். இதற்கிடையில் இடுப்பொருட்கள் விலை உயர்வு, ஆட்கள் பற்றாக்குறை காரணமாக பந்தல் காய்கறி சாகுபடி செய்ய முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே பந்தல் காய்கறிகளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டும். மேலும் பந்தல் காய்கறிகளுக்கு அரசிடம் இருந்து கிடைக்கும் மானியம் குறித்தும் பெரும்பாலும் விவசாயிகளுக்கு தெரிவதில்லை.

இதன் காரணமாக பந்தல் காய்கறிகள் குறித்த விலை அனைத்து விவசாயிகளுக்கும் தெரிவதற்கு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. மேலும் விவசாயிகள் கொண்ட வாட்ஸ்-அப் குழு தொடங்கப்பட்டு, அதில் தினமும் காய்கறிகள் விலை விவரம் குறித்த தகவல்கள் பதிவு செய்யப்படும். இதன் மூலம் வியாபாரிகள், விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு பந்தல் காய்கறிகளை கொள்முதல் செய்வது தடுக்கப்படும். விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஒட்டன்சத்திரம் போன்ற மற்ற மார்க்கெட்டுகளில் விலை விபரத்தை கேட்டு விலை நிர்ணயம் செய்யப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்