கரடியை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணிப்பு
களக்காடு அருகே ஊருக்குள் சுற்றி திரியும் கரடியை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணித்து வருகின்றனர்.
களக்காடு:
களக்காடு அருகே ஊருக்குள் சுற்றி திரியும் கரடியை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணித்து வருகின்றனர்.
கரடி நடமாட்டம்
களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையடிவார வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த கரடி மீண்டும் வனப்பகுதிக்கு செல்லாமல் அருகில் உள்ள கிராமங்களில் விளைநிலங்களில் சுற்றி திரிகின்றது.
களக்காடு அருகே பெருமாள்குளம் பொத்தையில் பதுங்கிய கரடி அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீருக்கான குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து செல்கிறது. கடந்த 2-ந்தேதி அங்குள்ள இசக்கியம்மன் கோவிலுக்கு கரடி வந்து சென்ற காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தின.
கூண்டு வைத்து கண்காணிப்பு
இதையடுத்து ஊருக்குள் சுற்றி திரியும் கரடியை பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து களக்காடு வனத்துறையினர் கரடி நடமாட்டம் காணப்படும் பெருமாள்குளத்தில் ஆய்வு செய்தனர். அங்கு பதிந்திருந்த கரடியின் கால்தடங்களையும் பார்வையிட்டனர்.
தொடர்ந்து கரடியை பிடிப்பதற்காக இசக்கியம்மன் கோவில் அருகில் வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர். கரடி விரும்பி உண்ணும் அன்னாசி பழங்களை கூண்டுக்குள் வைத்து வனத்துறை ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர். பழத்தை உண்பதற்காக கரடி வரும் போது கூண்டுக்குள் சிக்கி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.