ஈரோடு கிழக்கு தொகுதியில் பயன்படுத்தப்பட உள்ள1,386 வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர் -சின்னம் பொருத்தும் பணி தீவிரம்;கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு
ஈரோடு கிழக்கு தொகுதியில் பயன்படுத்தப்பட உள்ள 1,386 வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர் -சின்னம் பொருத்தும் பணி நேற்று நடந்தது. இதை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் பயன்படுத்தப்பட உள்ள 1,386 வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர் -சின்னம் பொருத்தும் பணி நேற்று நடந்தது. இதை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வேட்புமனு தாக்கல்
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் 4-ந்தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு வருகிற 27-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 31-ந்தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் போட்டி போட்டு வேட்பு மனுதாக்கல் செய்தனர். மொத்தம் 121 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் 83 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. 38 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மேலும் 6 பேர் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர்.
238 வாக்குச்சாவடிகள்
இதைத்தொடர்ந்து கடந்த 10-ந்தேதி 77 பேர் கொண்ட இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு அவர்களுக்கான சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 77 பேர் களத்தில் உள்ளனர். இதற்காக ஒரு வாக்குச்சாவடி மையத்தில் 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், ஒரு கட்டுப்பாட்டு எந்திரமும், வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை பார்க்கும் வசதி உள்ள வி.வி. பேட் எந்திரமும் வைக்கப்பட உள்ளது. இதில் 5-வது மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் நோட்டா இடம் பெறும்.
வேட்பாளர்கள் பெயர் -சின்னம்
தற்போது தேர்தலில் போட்டியிடும் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகிறார்கள். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களை கட்டி உள்ளது. கிழக்கு தொகுதியில் எந்த வீதிகளில் சென்றாலும் அரசியல் கட்சியினர் ஊர்வலமாக சென்று தீவிரமாக வாக்குகள் சேகரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டு உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் நேற்று புகைப்படத்துடன் கூடிய வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது. இந்த பணியினை ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கிருஷ்ணனுண்ணி, தேர்தல் பொது பார்வையாளர் ராஜ்குமார் யாதவ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
1,386 வாக்குப்பதிவு எந்திரங்கள்
இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணனுண்ணி கூறியதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தால் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் தொடர்பாக பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி மொத்தம் உள்ள 238 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்துவதற்காக 286 வாக்குப்பதிவு எந்திரங்கள், 286 கட்டுப்பாட்டு எந்திரங்கள் மற்றும் 310 வி.வி.பேட் எந்திரங்கள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் இறுதி வேட்பாளரகள்் பட்டியில் வெளியிடப்பட்டதில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுத்தியானதால் கூடுதலாக ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் 5 வாக்குப்பதிவு எந்திரங்கள் தேவைப்பட்டது. எனவே கூடுதலாக 1,100 வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திலும் 5 வாக்குப்பதிவு எந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு எந்திரம் என மொத்தம் 1,386 எந்திரங்களில் வாக்காளர்கள் பெயர் மற்றும் சின்னம் பொருத்தப்பட உள்ளது.
பதற்றமான வாக்குச்சாவடி
முதல்நிலை சரிபார்க்கும் பணி முடிந்தவுடன் கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டு, வைப்பறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று ஈரோடு மாநகராட்சி அலுவலக வைப்பறையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் எடுக்கப்பட்டு, ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட உள்ள வேட்பாளர்களது புகைப்படத்துடன் கூடிய பெயர் மற்றும் அவர்களது சின்னம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் தேர்தல் தொடர்பாக வரும் புகார்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 32 பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் நுண்பார்வையாளர்கள், வெப்கேமரா மூலம் கண்காணிக்கவும், கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான சிவகுமார், மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா மற்றும் வேட்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.