சைபர் குற்றங்களில் சிக்காமல் இருக்க சமூக வலைதளத்தில் தேவையற்ற லிங்குகளை தரவிறக்கம் செய்ய கூடாது

சைபர் குற்றங்களில் சிக்காமல் இருக்க சமூக வலைதளத்தில் தேவையற்ற லிங்குகளை தரவிறக்கம் செய்ய கூடாது என்று மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2023-06-16 18:45 GMT


சைபர் குற்றங்களில் சிக்காமல் இருக்க சமூக வலைதளத்தில் தேவையற்ற லிங்குகளை தரவிறக்கம் செய்யக்கூடாது என்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவுறுத்தினார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி அனல்மின்நிலைய ஊழியர்களுக்கு சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அனல்மின்நிலைய அரங்கில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கி பேசினார். அப்போது, தற்போதைய சூழ்நிலையில் அனைவரும் செல்போனை அதிகம் பயன்படுத்துகின்றனர். செல்போன் மூலமாக நமக்கு தேவையான அனைத்தும் இருந்த இடத்திலேயே பெறும் வசதிகள் வந்துவிட்டது. இதனால் ஏற்படும் சைபர் குற்றங்களிலில் இருந்து எப்படி நம்மை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு கண்டிப்பாக இருக்க வேண்டும். சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கே தாங்கள் பாதிக்கபட்டிருக்கிறோம் என்று தாமதமாகத்தான் தெரியவருகிறது. சமூகவலைதள பக்கங்களை பயன்படுத்தும்போது அதில்வரும் தேவையில்லாத லிங்குகளை தரவிறக்கம் செய்யவேண்டாம். அவ்வாறு தரவிறக்கம் செய்யப்படும்போது நமது சுயவிவரங்கள் திருடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆன்லைனில் டிரேடிங் கம்பெனி மூலம் அதிக லாபம் பெறலாம் என்று வரும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம். ஆன்லைனில் முதலீடு செய்து அதிகலாபம் பெறலாம் என்று வரும் விளம்பரங்களை நம்பி பணம் அனுப்பி ஏமாற வேண்டாம்.

கவனமுடன்..

செல்போன்களை நமது தேவைக்கு மட்டுமே பயன்படுத்தி கொள்ள வேண்டுமே தவிர அதற்கு அடிமையாகி விடக்கூடாது. குழந்தைகள் செல்போன்களை பயன்படுத்தும்போது நமது கண்காணிப்பிலேயே பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். வங்கியில் இருந்து அழைப்பதாக கூறி ஏ.டி.எம் கார்டு எண்களை கேட்டு வரும் தொலைபேசிகளுக்கு பதில் அளிக்க வேண்டாம். நமது எண்ணங்கள் நல்ல சிந்தனைகளை நோக்கியே இருக்க வேண்டும். எனவே செல்போன்களை பயன்படுத்தும்போது மிக கவனமுடன் இருக்க வேண்டும். செல்போன்களில் அதிக நேரத்தை செலவிடாமல், உடற்பயிற்சி செய்வதில் செலவிடுங்கள், குழந்தைகளை விளையாட அனுமதியுங்கள், உடற்பயிற்சியினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும், உடல் ஆரோக்கியமாக இருந்தாலே மனமும் ஆரோக்கியமாக இருக்கும், உங்கள் குழந்தைகளுக்கு நன்றி, மன்னியுங்கள் என்ற வார்த்தைகளின் அர்த்தத்தை சொல்லிக் கொடுத்து வளருங்கள் என்று கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ், தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம், தூத்துக்குடி அனல்மின்நிலைய தலைமை பொறியாளர் (பொறுப்பு) ஜஸ்டின் ஜெகதீப் குமார் மற்றும் அனல்மின்நிலைய ஊழியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) கார்த்திகேயன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையிலான போலீசார் செய்து இருந்தனர்

Tags:    

மேலும் செய்திகள்