அரியலூர் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வினை 21,914 பேர் எழுதினர்
அரியலூர் மாவட்டத்தில் நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வினை 21,914 பேர் எழுதினர். 3,812 பேர் தேர்வு எழுதவில்லை.
குரூப்-4 தேர்வு
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் 25,726 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இதையடுத்து 95 மையங்களில் குரூப்-4 தேர்வு நேற்று நடந்தது.
தேர்வு அறைக்குள் தேர்வாளர்களை 9 மணி வரை மைய கண்காணிப்பாளர்கள் அனுமதித்தனர். மேலும் தேர்வு அறை நுழைவு சீட்டு (ஹால் டிக்கெட்) பரிசோதனை செய்து தேர்வாளர்களை மட்டும் தேர்வு அறைக்குள் அனுமதித்தனர். சரியாக 9.30 மணியளவில் தொடங்கிய தேர்வு மதியம் 12.30 மணி வரை நடந்தது. 200 கொள்குறி வகை வினாக்கள் கேட்கப்பட்டு, 300 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடந்தது.
21,914 பேர் தேர்வு எழுதினர்
அரியலூர் மாவட்டத்தில் 21,914 பேர் குரூப்-4 தேர்வினை எழுதினர். 3,812 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த தேர்வினை கண்காணிப்பதற்காக துணை ஆட்சியர் நிலையில் பறக்கும் படை அலுவலர்களும், இயங்கு குழுக்கள் மற்றும் கண்காணிப்பாளர், உதவியாளர் நிலையில் தேர்வுக்கூட நடைமுறைகளை கண்காணித்திட ஆய்வு அலுவலர்களும் தேர்வு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் தேர்வு பாதுகாப்பு பணிகளில் போலீசாரும், துப்பாக்கி ஏந்திய போலீசாரும் ஈடுபட்டனர். அனைத்து தேர்வு மையங்களிலும் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
தேர்வு துளிகள்
*குரூப்-4 தேர்வினை எழுத வந்த திருமணமான பெண்கள் தங்களது குழந்தைகளை மைய வளாகத்தில் தங்களது பெற்றோர், கணவரிடம் கொடுத்து விட்டு சென்றனர். அவர்கள் குழந்தையை கவனித்து கொண்டனர்.
* தேர்வு எழுத வந்த சில தேர்வாளர்களை அவர்களின் பெற்றோர் மையம் வரை அழைத்து வந்து விட்டு வாழ்த்தி ஆசீர்வாதம் வழங்கி வழியனுப்பி வைத்தனர்.
* தேர்வு எழுத வந்திருந்த மாற்றுத்திறனாளி, கர்ப்பிணி தேர்வாளர்களை அறைக்கு அழைத்து செல்வதற்கும், திரும்பி அழைத்து வருவதற்கும் தேர்வு மைய அலுவலர்கள் உதவிபுரிந்தனர்.
* சில தேர்வாளர்கள் தேர்வு அறைக்கு கடைசி நேரத்தில் புயல் வேகத்தில் ஓடி வந்ததை காணமுடிந்தது.
* தேர்வாளர்களில் முககவசம் அணிந்தவர்களை மட்டும் தேர்வு அறைக்கு செல்ல அனுமதித்தனர்.
* தேர்வாளர்கள் செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
* தேர்வு எழுதி வருவதற்கு வசதியாக சிறப்பு அரசு பஸ்களும் இயக்கப்பட்டன.
* தேர்வு மையத்துக்கு காலை 9 மணிக்கு மேல் வந்தவர்களை தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் அலுவலர்கள், போலீசாரிடம் நீண்ட நேரம் போராடியும் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் வீட்டிற்கு நடையை கட்டினர்.