டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் மூலமே அரசு வேலை பெற முடியும்

Update: 2022-05-28 17:11 GMT

தண்டராம்பட்டு

மனு கொடுத்து அரசு வேலை பெற முடியாது. டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் மூலமே இளைஞர்கள் அரசு வேலை பெற முடியும் என்று தண்டராம்பட்டில் நடந்த விழாவில் கலெக்டர் முருகேஷ் பேசினார்.

இளைஞர் திறன் திருவிழா

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் செயல்படுத்தும் தயாள் உபாத்யாயா கிராமப்புற திறன் பயிற்சி திட்டத்தின் மூலம் இளைஞர் திறன் திருவிழா நடைபெற்றது.

இதனை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டம் கிராமங்கள் நிறைந்த மாவட்டமாகும். இங்கு வேலை வாய்ப்பின்றி அதிகமான இளைஞர்கள் உள்ளனர்

வாரந்தோறும் நடைபெறும் குறைதீர்வு கூட்டத்தில் தங்களுக்கு வேலை வேண்டும் நாங்கள் படித்து இருக்கிறோம் என்று சொல்லி மனுக்கள் கொடுக்கிறார்கள். இந்த மனுக்கள் அதிகரித்து வருகிறது ஆனால் இந்த வழியில் இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற முடியாது

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள்

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதால் தனியார் துறைகள் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தும்போது அதில் பங்குகொண்டு வேலை பெறலாம். அரசு வேலை வேண்டும் என்றால் தேர்வாணையம் நடத்துகிற டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் மூலம் தான் அரசு வேலைகளை இளைஞர்களை பெற முடியும்.

கிராமப்புற இளைஞர்களின் திறன் மேம்பாடு பயிற்சியின் மூலம் வேலைவாய்ப்புத்துறையில் 120 தனியார் துறைகள் இணைந்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி வருகின்றனர்.

இதில் 35 வயதுள்ள இளைஞர்கள் வரை விண்ணப்பித்து வேலைவாய்ப்பை பயிற்சியுடன் பெற முடியும். அதேபோல மாற்றுத்திறனாளிகளுக்கு 45 வயது வரை வேலை வாய்ப்பை பெற முடியும்.

இந்த பயிற்சிக்கான இருப்பிடம், உணவு உள்ளிட்ட அனைத்தும் இலவசமாக அரசு வழங்குகிறது. இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பணி நியமன ஆணை

அதைத்தொடர்ந்து கிராமப்புற திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தில் பணி நியமனத்துடன் கூடிய பயிற்சியை பெற 327 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 13 மாணவர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி பெறவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பணி நியமன ஆணை மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் முருகேஷ் வழங்கினார்.

விழாவில் கூடுதல் கலெக்டர் பிரதாப், திட்ட இயக்குனர் சையித், தண்டராம்பட்டு ஒன்றியக்குழு தலைவர் பரிமளாகலையரசன், உதவி திட்ட அலுவலர்கள் ரவிச்சந்திரன், வெங்கடேசன், வில்லியம் சகாயம், பெருமாள், சந்திரகுமார், சிவக்குமார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிர்மலா, மகாதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்