டி.என்.பி.எஸ்.சி. மூலம் ஓராண்டில் 1,754 பணியிடங்களை மட்டும் நிரப்புவது போதுமானது அல்ல - ராமதாஸ் அறிக்கை

டி.என்.பி.எஸ்.சி. மூலம் ஓராண்டில் 1,754 பணியிடங்களை மட்டும் நிரப்புவது போதுமானது அல்ல என டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2022-12-16 09:48 GMT

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் 2023-ம் ஆண்டில் அறிவிக்கப்பட உள்ள வேலைவாய்ப்புக்கான போட்டி தேர்வுகளின் அட்டவணை வெளியிடப்பட்டிருக்கிறது. குரூப்-4 தேர்வுகள் தவிர்த்து, ஒராண்டு முழுவதும் 10 தேர்வுகள் மூலம் 1,754 பணியிடங்கள் மட்டும் தான் நிரப்பப்பட உள்ளன என்பது ஏமாற்றமளிக்கிறது. இந்த எண்ணிக்கை எந்த வகையிலும் போதுமானதல்ல.

2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் 3½ லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படும். 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி பார்த்தால், ஒவ்வொரு ஆண்டும் இயல்பாக ஏற்படும் 20 ஆயிரம் காலியிடங்களையும் சேர்த்து, ஒவ்வொரு ஆண்டும் 1.30 லட்சம் பேர் அரசு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படவேண்டும். ஆனால், அதில் 10 சதவீதத்தினரை கூட தேர்ந்தெடுக்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வராதது தமிழ்நாட்டு பட்டதாரி இளைஞர்களின் அரசு பணி கனவை கலைக்கும் செயலாகும்.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கையையும், புதிதாக உருவாக்கப்பட உள்ள பணியிடங்களின் எண்ணிக்கையையும் துறை வாரியாக தமிழக அரசு வெளியிட வேண்டும். அவற்றை அடுத்த 3 ஆண்டுகளில் நிரப்பும் வகையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 1½ லட்சம் பேருக்காவது அரசு வேலை வழங்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்