சட்டசபை கூட்டத்தொடர் நாளை மறுநாள் வரை நடைபெறும் - அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு

தமிழக சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் 2 நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-10-17 05:36 GMT

சென்னை,

தமிழக சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் இன்று கூடியது. இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

அதேவேளை, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை. ஆனால், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தொடரில் பங்கேற்றனர். எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்திருந்தார்.

கூட்டத்தொடர் தொடங்கியதும் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள், இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத், தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இரங்கல் தீர்மானத்திற்கு பின், இன்றைய சட்டசபை கூட்டம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியை சேர்ந்த அலுவல் ஆய்வுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்றார். இந்த ஆய்வு கூட்டத்தில் சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது உள்பட பல்வேறு விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 2 நாட்களுக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மற்றும் நாளை மறுதினம் (அக்டோபர் 18,19) ஆகிய 2 நாட்களுக்கு கூட்டத்தொடர் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 நாட்கள் நடைபெற உள்ள இந்த மழைக்கால கூட்டத்தொடரில் நாளை ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்