த.மு.மு.க. சார்பில் கோவை சிறையை முற்றுகையிடும் போராட்டம்

நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்யக்கோரி, த.மு.மு.க. சார்பில் கோவை சிறை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. உள்பட திரளானவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Update: 2023-07-09 21:15 GMT

நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்யக்கோரி, த.மு.மு.க. சார்பில் கோவை சிறை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. உள்பட திரளானவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.


சிறை முற்றுகை போராட்டம்


ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்ய தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி கோவை சிறை முன்பு முற்றுகையிடும் போராட்டத்தை த.மு.மு.க. அறிவித்து இருந்தது. இந்த போராட்டம் நேற்று மாலை வ.உ.சி. மைதானம் அருகே உள்ள சிறை ரோட்டில் நடைபெற்றது.


த.மு.மு.க. மற்றும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். த.மு.மு.க. பொதுச்செயலாளர் ஹாஜா கனி, அப்துல் சமது எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோவை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சுப்பராயன், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் உள்பட பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.


திரளானவர்கள் பங்கேற்பு


சிறை முற்றுகை போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் வேன் மற்றும் பஸ்களில் வந்தனர். ஏராளமானவர்கள் கூடியதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.


போராட்டத்துக்கு தலைமை தாங்கிய ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. பேசும்போது தமிழ்நாடு முழுவதும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 37 கைதிகளை ஒரு மாதத்துக்குள் விடுவிக்க வேண்டும் என்று கூறினார்.


பின்னர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-


37 கைதிகள்


கோவை மண்டலம் சார்பில் சிறை முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது. இதில் திரளானவர்கள் கலந்துகொண்டுள்ளனர். பல்வேறு சிறைகளில் உள்ள 37 முஸ்லிம் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்.


கடந்த காலங்களில் அண்ணா நூற்றாண்டு, எம்.ஜி.ஆர் நூற்றாண்டையொட்டி விடுதலை செய்யப்பட்ட கைதிகளில் முஸ்லிம் கைதிகள் இல்லை. எனவே கருணாநிதி நூற்றாண்டையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 37 கைதிகளை ஒரு மாதத்தில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும்.


தமிழக கவர்னர் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனாதிபதியிடம் கடிதம் கொடுத்து இருப்பதை வரவேற்கிறோம். தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி, பதவியில் நீடிக்க தகுதியற்றவர். பாரதீய ஜனதா அரசுக்கு எதிராக ஏற்கனவே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டம் நடத்தின. இனி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெறும் அடுத்தக்கட்ட கூட்டம் சிறந்த முன்னெடுப்பு கூட்டமாக அமையும்.


இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்