திருவண்ணாமலை அய்யங்குளம் தூர்வாரப்படும்
திருவண்ணாமலை அய்யங்குளம் தூர்வாரப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
திருவண்ணாமலை நகரில் அய்யங்குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் ஆண்டுக்கு 5 முறை சாமி தீர்த்தவாரி நடைபெறும்.
மேலும் அமாவாசை நாட்களில் இந்த குளக்கரையில் ஏராளமானவர்கள் முன்னோருக்கு தர்ப்பணம் செய்வார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த குளத்தில் தீர்த்தவாரி நடந்தபோது 4 பேர் சேற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தநிலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று அய்யங்குளத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:-
அய்யங்குளத்தில் ஆண்டுக்கு 5 முறை தீர்த்தவாரி நடைபெறும். மேலும் கார்த்திகை தீபத்திருவிழா முடிந்த பின்னர் 3 நாட்கள் தெப்பல் திருவிழா நடைபெறும்.
இதில் ஆன்மிக பக்தர்கள் பலர் கலந்து கொள்வார்கள். இங்கு கடந்த ஆட்சியில் நடைபெற்ற தீர்த்தவாரியில் 4 பேர் இறந்தனர். இந்த சம்பவம் இன்றும் என் நினைவில் உள்ளது. குளம் சேறும், சகதியுமாக உள்ளது, இதை சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.
எனவே சட்டமன்ற உறுப்பினர் நிதி அல்லது தூய்மை அருணை சார்பில் இந்த குளம் தூர்வாரப்படும். படிக்கட்டுகள் செப்பனிப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவரிடம் அங்கிருந்த பக்தர்கள் இரவில் இங்கு மர்மநபர்கள் நடமாட்டம் உள்ளது. எனவே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். மேலும் கண்காணிப்பு கேமராவும் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
ஆய்வின்போது கலெக்டர் முருகேஷ், போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாநில தடகள சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்.பி., தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், நகரசெயலாளர் கார்த்திவேல்மாறன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட பிரதிநிதி குட்டி புகழேந்தி, அருணை கன்ஸ்ட்ரக்ஷன் துரைவெங்கட், நகராட்சி கமிஷனர் தட்சிணாமூர்த்தி மற்றும் அதிகாரிகள் பலர் உடன்இருந்தனர்.