ஆறுமுக முருகன் கோவிலில் திருப்படி திருவிழா

வயலூர் திருவேதிகை மலையில் உள்ள ஆறுமுக முருகன் கோவிலில் திருப்படி திருவிழா நடந்தது.

Update: 2023-07-02 13:24 GMT

சேத்துப்பட்டு

சேத்துப்பட்டு தாலுகா பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியம் வயலூர் கிராமத்தில் திருவேதிகை மலையில் உள்ள ஆறுமுக முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் திருப்படி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இன்று 59-வது ஆண்டு திருப்படி திருவிழா நடந்தது.

இதையொட்டி காலையில் ஆறுமுக முருகனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், குங்குமம், இளநீர், தேன், கரும்புச்சாறு ஆகியவை கொண்டு அபிஷேகம் செய்து, சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

நேர்த்திக்கடனாக பக்தர்கள் கொக்கி தேர் காவடி, பால் காவடி, சந்தன காவடி, புஷ்ப காவடிகளை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

திருவேதிகை மலையை அடைந்த பின்னர் 113 படிகளில் ஒவ்வொரு படிக்கும் மஞ்சள், குங்குமம் வைத்து தேங்காய் உடைத்து வழிபட்டனர்.

பின்னர் மலை மீது உள்ள முருகர் சன்னதிக்கு சென்று காவடிகளை செலுத்தினர்.

அதைத்தொடர்ந்து ஆறுமுக முருகனுக்கு மருதமலை ராஜ அலங்காரம் செய்யப்பட்டு, பம்பை, உடுக்கை, சிலம்பாட்டத்துடன் முத்துப்பல்லக்கில் வீதி உலா நடந்தது.

பின்னர் பக்தி சொற்பொழிவும், வாணவேடிக்கையும், இரவு நாடகமும் நடந்தது.

முன்னதாக காலையில் சுமங்கலி பெண்கள் 108 பால் குடத்துடன் மலைக்கு சென்று ஆறுமுக முருகனுக்கு அபிஷேகம் செய்தனர்.

13 இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில் நல்லடிசேனை, மடம், வயலூர், பூங்கோணம், மேலந்தியம்பாடி, வில்லிவலம், வேப்பம்பட்டு, சேத்துப்பட்டு தேசூர் ஆகிய பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை திருவிழா உபயதாரர்கள், சுத்த சன்மார்க்க சங்கத்தினர், இளைஞர் மன்றத்தினர், வயலூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்