திருப்பதிசாரம் சுங்கச்சாவடி கட்டணம் உயா்வு

நாகர்கோவில்-காவல்கிணறு தேசிய நெடுஞ்சாலையில் திருப்பதிசாரம் சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.5 முதல் ரூ.20 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-04-01 18:45 GMT

நாகர்கோவில், 

நாகர்கோவில்-காவல்கிணறு தேசிய நெடுஞ்சாலையில் திருப்பதிசாரம் சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.5 முதல் ரூ.20 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பல சுங்கச்சாவடிகளில் உபயோகிப்பாளர் கட்டணம் உயர்த்தப்பட்டு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதேபோல குமரி மாவட்டத்திலும் நாகர்கோவில்-காவல்கிணறு தேசிய நெடுஞ்சாலையில் திருப்பதிசாரத்தில் உள்ள சுங்கச்சாவடியிலும் உபயோகிப்பாளர் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

இந்த சுங்கச்சாவடி வழியாக செல்லும் கார், ஜீப், வேன், இலகுரக வாகனம், மினி பஸ், பஸ் அல்லது டிரக், 3 அச்சுகள் கொண்ட வணிக வாகனங்கள், பல அச்சுகள் கொண்ட கட்டுமான வாகனங்கள் அல்லது மண் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் என வாகனங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு தனித்தனியே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வணிக பயன்பாடு இல்லாத உள்ளூர் வாகனங்களுக்கு 2022-2023-ம் ஆண்டு விதிக்கப்படும் மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.315 என்றும் தெரிவிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு வந்தது.

மாதாந்திர பாஸ்

இந்த நிலையில் உபயோகிப்பாளர் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் 2023-2024-ம் ஆண்டு மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.315-ல் இருந்து ரூ.330 ஆக அதிகரித்துள்ளது.

இதே போல கார், ஜீப், வேன் அல்லது இலகுரக வாகனங்கள் ஒரு முறை பயணம் செய்து விட்டு திரும்ப பயணம் செய்வதற்கான கட்டணம் ரூ.95-ல் இருந்து ரூ.100 ஆக உயா்ந்துள்ளது. வாகனங்கள் ஒரு மாதத்தில் 50 தடவை ஒருவழி முறை பயணம் செய்ய மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.1,310-ல் இருந்து ரூ.1,375 ஆக உயர்ந்துள்ளது. பஸ், லாரிகள் ஒருமுறை பயணிக்க ரூ.135-ல் இருந்து ரூ.140 ஆக அதிகாித்துள்ளது. திரும்ப பயணிப்பதற்கான கட்டணம் ரூ.200-ல் இருந்து ரூ.210 ஆக உயத்தப்பட்டுள்ளது. மேலும் மாதாந்திர பயண பாஸ் கட்டணம் ரூ.4,435-ல் இருந்து ரூ.4,665 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது. வணிக வாகனங்கள் ஒருமுறை பயணிப்பதற்கான கட்டணம் ரூ.145-ல் இருந்து ரூ.150 ஆக உயர்ந்துள்ளது. அதுவே திரும்ப பயணிப்பதற்கான கட்டணம் ரூ.220-ல் இருந்து ரூ.230 ஆக அதிகரித்துள்ளது.

மாற்றம் இல்லை

இதே போல 3 அச்சுகள் கொண்ட வணிக வாகனங்கள், பல அச்சுகள் கொண்ட கட்டுமான வாகனங்கள் அல்லது மண் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கும் கட்டணம் உயர்ந்துள்ளது. சுங்கச்சாவடியில் உயர்த்தப்பட்ட இந்த கட்டணமானது நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து வசூலிக்கப்பட்டது.

கார், ஜீப், வேன் அல்லது இலகுரக வாகனங்கள் ஒரு முறை பயணம் செய்ய ரூ.40 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் மாற்றம் செய்யப்படவில்லை. இதே போல இலகுரக வணிக வாகன வகைகள், மினி பஸ்களுக்கான ஒரு முறை பயண கட்டணம் மாற்றம் செய்யப்படவில்லை. மற்ற அனைத்து வாகன கட்டணமும் மாற்றம் செய்யப்பட்டு ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்