திருமுல்லைவாசல் மீன்பிடி துறைமுகத்தை சீரமைக்க நடவடிக்கை

திருமுல்லைவாசல் மீன்பிடி துறைமுகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

Update: 2023-08-02 18:45 GMT

சீர்காழி:

திருமுல்லைவாசல் மீன்பிடி துறைமுகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

இலவச சைக்கிள் வழங்கும் விழா

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருமுல்லைவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா வரவேற்று பேசினார்.

விழாவில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு சீர்காழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 16 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.85 லட்சத்து 35 ஆயிரத்து 800 மதிப்பிலான 1,771 இலவச சைக்கிள்களை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

அரசு மருத்துவக்கல்லூரி

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்வித்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறார். இதனை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மாணவர்கள் நல்ல முறையில் கல்வி கற்றுக்கொண்டால் தான் எதிர்காலம் சிறப்பாக அமையும். விரைவில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் திருமுல்லைவாசல் மீன்பிடி துறைமுகம் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். விழாவில் உதவி கலெக்டர் அர்ச்சனா, தாசில்தார் செந்தில்குமார், சீர்காழி நகர சபை தலைவர் துர்கா ராஜசேகரன், துணைத்தலைவர் சுப்பராயன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் பிரபாகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கார்த்திக், பள்ளி தலைமை ஆசிரியர்கள், கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாணவ-மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

கோமல் அரசு பள்ளியில்...

இதேபோல் குத்தாலம் ஒன்றியம் கோமல் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில், அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார். 

Tags:    

மேலும் செய்திகள்