பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய திருமங்கலம் ஆட்டுச் சந்தை...!

திருமங்கலம் ஆட்டுச் சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ரூ.1 கோடி வரையில் ஆடுகள் விற்பனையானது.

Update: 2022-07-01 15:05 GMT

திருமங்கலம்,

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் வாரந்தோறும் ஆட்டுச் சந்தை வெள்ளிக்கிழமை நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று ஆட்டு சந்தை நடைபெற்றது.

இதில் ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு வந்தன. மேலும் வாரந்தோறும் விற்பனையாகும் விலையை விட கூடுதலாக 3000 இலிருந்து 5000 வரை விற்பனை ஆவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் பொள்ளாச்சிக்கு அடுத்த பெரிய சந்தையாக கருதப்படும் இந்த ஆட்டுச் சந்தையில் ஒவ்வொரு வாரமும் 8000 முதல் 10 ஆயிரம் வரையிலான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தென்மாவட்டத்தில் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, கோவில்பட்டி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வியாபாரிகள் ஆடு கோழிகள் வாங்கிச் செல்வது வழக்கம். அதிகாலை 4 மணியிலிருந்து 9 மணி வரை கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படும்.

இந்த நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கி 9 மணி வரை ஆட்டுச் சந்தை நடைபெற்றது. வழக்கமாக காணப்படும் கூட்டத்தை விட அதிகமாக கூட்டம் அலை மோதியது.

ஆடுகளின் விலை 10 ஆயிரம் முதல் 20,000 வரை விற்பனையானது. வருகிற 10-ஆம் தேதி பக்ரீத் பண்டிகை நடைபெறுவதால் இந்த வாரம் வெள்ளிக்கிழமை ஆட்டுச் சந்தை களைகட்டியது. சுமார் ஒரு கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்