சிறுவாபுரி முருகன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி
சிறுவாபுரி முருகன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.;
திருக்கல்யாண விழா
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரி முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வீற்றிருக்கும் முருகபெருமானை தரிசித்து அர்ச்சனை செய்து கொண்டு மாலையுடன் கோவிலை வலம் வந்தால் திருமணம், பிள்ளைப்பேறு, வேலை வாய்ப்பு உள்ளிட்ட பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறுவதாக கூறப்படுகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று திருக்கல்யாணம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று 27-வது ஆண்டாக திருக்கல்யாண விழா நடைபெற்றது.
இதை முன்னிட்டு நேற்று காலை சாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர், மகா அலங்காரம், மகா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, திருக்கல்யாண உற்சவ மகோத்சவம் நடைபெற்றது.
முத்தங்கி சேவையில்
நேற்று மதியம் மாங்கல்ய தாரணம் நடைபெற்றது. அதன் பின்னர், மங்கள வாத்தியம் மற்றும் திருக்கயிலாய வாத்தியம் முழங்க சாமி 6 முறை உள்பிரகார புறப்பாடு நடைபெற்றது. மூலவர் முத்தங்கி சேவையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார் தலைமையில் மயிலை சிறுவாபுரி பிரார்த்தனை குழுவினர் மற்றும் பக்தர்கள் சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.