திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Update: 2022-08-17 10:37 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ஆவணி திருவிழா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. பின்னர் கொடிப்பட்டம் கோவிலில் இருந்து புறப்பட்டு ஒன்பது சந்திகளிக்கும் வீதிஉலா சென்று மீண்டும் கோவிலுக்கு வந்தடைந்தது.

தொடர்ந்து, கொடிப்பட்டத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதிகாலை 5.40 மணிக்கு கோவில் 2-ம் பிரகாரத்தில் உள்ள செப்பு கொடிமரத்தில் காப்பு கட்டிய ஹரிஹர சுப்பிரமணிய பட்டர் இந்த ஆண்டுக்கான ஆவணி திருவிழா கொடியேற்றினார்.

புனிதநீர் அபிஷேகம்

பின்னர் கொடிமர பீடத்துக்கு எண்ணெய், திரவிய பொடி, மஞ்சப்பொடி, மாபொடி, இளநீர், தேன், பஞ்சாமிர்தம், பால், பன்னீர், விபூதி, சந்தனம் மற்றும் பூஜையில் வைக்கப்பட்ட கும்ப கலசத்தில் இருந்த புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.

கொடிமர பீடம் தர்ப்பை புல்லாலும், வண்ண மலர்களாலும், பட்டாடைகளாலும் அலங்கரிக்கப்பட்டது. தொடர்ந்து 7.05 மணிக்கு சோடாச தீபாராதனை நடந்தது. தீபாராதனைக்கு பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் பாபு, துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன், கோவில் தக்கார் பிரதிநிதியும், ஓய்வுபெற்ற கால்நடை துறை உதவி இயக்குனருமான பாலசுப்பிரமணிய ஆதித்தன், இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், ஏரல் சேர்மன் கோவில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டி நாடார், திருச்செந்தூர் நகராட்சி துணை தலைவர் செங்குழி ரமேஷ், கோவில் கண்காணிப்பாளர்கள் சீதாலெட்சுமி, ஆனந்தராஜ், உதவி பாதுகாப்பு அலுவலர் ராமச்சந்திரன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தேரோட்டம்

5-ம் திருநாளான 21-ந் தேதி இரவு 7.30 மணிக்கு சுவாமி, அம்மனுக்கு குடைவரைவாயில் தீபாராதனை நடக்கிறது. 7-ம் திருநாளான 23-ந் தேதி மாலையில் சுவாமி சிவப்பு நிற பட்டு உடுத்தி சிவன் அம்சமாக தங்க சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

அதேபோல் 8-ம் திருநாள் அதிகாலையில் சுவாமி வெண்பட்டு அணிந்து பிரம்மா அம்சமாக வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளுகிறார். அன்று பகலில் பச்சை நிற பட்டு உடுத்தி பெருமாள் அம்சமாக பச்சை நிற கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். 10-ம் திருநாளான 26-ந் தேதி காலையில் தேரோட்டம் நடக்கிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்