திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிகோவிலில் ஆனி வருசாபிஷேகம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி வருசாபிஷேகம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி வருசாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிைசயில் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
சுப்பிரமணிய சுவாமி கோவில்
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று ஆனி வருசாபிஷேகம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது.
பின்னர் கோவில் மகாமண்டபத்தில் மூலவர், வள்ளி, தெய்வானை அம்பாள் கும்பங்களுக்கும், குமரவிடங்க பெருமான் சன்னதியில் சண்முகர் கும்பத்திற்கும், பெருமாள் சன்னதியில் பெருமாள் கும்பத்திற்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
வருசாபிஷேகம்
தொடர்ந்து பூஜையில் வைக்கப்பட்ட கும்பங்கள் கோவில் மேல் தளத்திற்கு கொண்டு வரப்பட்டது. காலை 9.40 மணிக்கு மூலவர் விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி வருசாபிஷேகம் நடந்தது. பின்னர் சண்முகர், பெருமாள், வள்ளி அம்பாள், தெய்வானை அம்பாள் ஆகிய விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி வருஷாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது.
மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி குமரவிடங்க பெருமானும், வள்ளி அம்பாளும் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். கோவிலில் மகா கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் நடைபெற்று வருவதால், கோவில் மேல்தளத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
நேற்று விடுமுறை தினம் என்பதால் கோவில் வளாகத்தில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். கட்டண டிக்கெட் மற்றும் இலவச தரிசன வரிசையிலும் பக்தர்கள் குவிந்து காணப்பட்டனர். இதனால் பக்தர்கள் பலமணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.