திருச்செந்தூர் அமலிநகரில்3-வது நாளாக மீனவர்கள் மனித சங்கிலி போராட்டம்

திருச்செந்தூர் அமலிநகரில் 3-வது நாளாக மீனவர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

Update: 2023-08-09 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அமலிநகரில் தூண்டில் வளைவு பாலம் அமைக்க வலியுறுத்தி மீனவர்கள் நேற்று 3-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் கடற்கரையில் குடும்பத்தினருடன் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மீனவர்கள் பாதிப்பு

திருச்செந்தூர் அமலிநகரில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சமார் 200 பைபர் படகுகள் மூலம் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் கடல் சீற்றத்தின் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டு மீன்பிடித் தொழிலுக்கு சென்று வரும் போது கரையில் படகுகளை நிறுத்த முடியாமல் சிரமம் ஏற்படுவதாகவும், இதனால் படகுகள் அடிக்கடி கவிழ்ந்து மீனவர்கள் காயம் அடைவதாகவும், இதனை தடுக்க அமலிநகரில் தூண்டில் வளைவு பாலம் அமைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

தூண்டில் வளைவுபாலம்

இந்நிலையில் 2022-ம் ஆண்டு சட்டப்சபை மீன்வள மானிய கோரிக்கையின் போது, ரூ.58 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை. எனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமலிநகர் மீனவர்கள் கடந்த 7-ந் தேதி முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் படகுகள் அனைத்தும் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

பேச்சுவார்த்தைக்கு மறுப்பு

மேலும் வருகிற 18-ந் தேதி ராமநாதபுரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் மீனவர்கள் மாநாட்டை புறக்கணிக்க போவதாகவும் அமலிநகர் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்தும், அதற்கு மீனவர்கள் மறுப்பு தெரிவித்து விட்டனர்.

3-வது நாளாக..

தூண்டில் வளைவு பாலம் அமைக்க வலியுறுத்தி அமலிநகர் நகர் மீனவர்கள் நேற்று 3-வது நாளாக கடலுக்கு செல்லாமல் கடற்கரையில் நின்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தூண்டில் வளைவு பாலம் அமைக்க வலியுறுத்தி தொடர்ந்து கோஷங்கள் எழுப்பினர். மனித சங்கிலி போராட்டத்தில் மீனவர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அரசு உடனடியாக இதில் தலையிட்டு சுமூக தீர்வு காண வேண்டும். இல்லாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்த போவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்