கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்கும் வழிமுறைகள்

கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்கும் வழிமுறைகள் குறித்து மருத்துவர் ஆலோசனை வழங்கினார்;

Update: 2023-05-18 19:50 GMT

அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. விருதுநகர் உள்பட பல மாவட்டங்களில் தினமும் வெயில் சதமடித்துக் கொண்டிருக்கிறது. அனல் காற்று வீசுகிறது.

கல்லூரிகளுக்கு விடுமுறை

கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பித்து கொள்வதற்காக சிலர் ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர்பிரதேசங்களை தேடி செல்கின்றனர். பலர் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். கோடை வெப்பத்தில் இருந்து பிள்ளைகளை காத்து கொள்வதற்காக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

வெப்பத்தால் ஏற்படும் வியர்வை மூலமாக உடலில் இருந்து வெளியேறும் உப்பு சத்துகளை ஈடு செய்வதற்காக நீர் மோர், பதநீர், நுங்கு, இளநீர், தர்பூசணி, எலுமிச்சை சாறு மற்றும் பழச்சாற்றை அருந்தும்படி ஆலோசனை வழங்கப்படுகிறது.

கொளுத்திவரும் கோடை வெயிலை பொதுமக்கள் எவ்வாறு சமாளித்து வருகிறார்கள் என்பது பற்றி சிலரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அளித்த பதில் விவரம் வருமாறு:-

எண்ணெய் குளியல்

டாக்டர் சத்தியசீலன் (அரசு சித்த மருத்துவர், விருதுநகர்):-

சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை தவிர்க்க மதிய நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க தினசரி 3.5 லிட்டர் முதல் 4.5 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்.

இளநீர், பதநீர், வெள்ளை பூசணி சாறு, முள்ளங்கி சாறு, மோர், பார்லிநீர், கூழ், கஞ்சி, உள்ளிட்ட திரவ உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். வெளியில் செல்லும் பொழுது கண்ணாடி அணிந்து செல்ல வேண்டும். கருப்பு கண்ணாடி அணிந்து செல்லக்கூடாது. வெள்ளை நிற பருத்தி ஆடைகளை அணிந்து செல்ல வேண்டும். ஆண்களும், பெண்களும் வாரத்தில் இருமுறை எண்ணெய் குளியல் எடுக்க வேண்டும். இரவில் படுக்கும் பொழுது பாதத்தில் எண்ணெய் அல்லது நெய்தடவிக் கொள்வது நல்லது.

சைவ உணவு

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த தம்பதி ராதா ருக்மணி, பாண்டியராஜன்:-

தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் குழந்தைகளுக்கு சிக்கன் மட்டன் போன்ற உணவுகளை கொடுப்பதை தவிர்த்து உள்ளோம். அதேபோல தேவையின்றி மதிய ேநரத்தில் வெளியே செல்வதை தவிர்த்து விட்டோம். வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கும் சைவ உணவுகளையே வழங்குகிறோம். அடிக்கடி தண்ணீர், கரும்புச்சாறு, இளநீர் ஆகியவற்றை பருகுகிறோம். வெயிலின் தாக்கத்தை சமாளிக்க கூடிய வகையில் நுங்கு பதநீர் சாப்பிடுகிறோம். இதன் மூலம் வெயிலிலிருந்து ஓரளவு தப்பிக்க முடிகிறது. வெயிலினால் வரக்கூடிய நோய்கள் மிகவும் கொடுமையானது. எனவே விழிப்புணர்வு இருந்தால் அதனை தடுக்கலாம்.

குளிர்பானங்கள்

செட்டியார்பட்டியை சேர்ந்த துளசி, சேத்தூரை சேர்ந்த மணிமாலா:-

ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதிலிருந்து தப்பித்து கொள்ள பொதுமக்கள் குளிர்பானங்களை தேடி செல்வதுடன், வீட்டில் இருந்து வெளியே செல்வதையும் தவிர்த்து வருகின்றனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தினமும் 3 முறை குளிக்கிறோம். ஊட்டி, கொடைக்கானல், கடற்கரை பகுதிகளுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்று ஒரு சிலர் கோடை வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்கின்றனர். காபி, டீ ஆகியவற்றை தவிர்த்து பழச்சாறு, தயிர், நீர்மோர் ஆகியவற்றையும், தண்ணீரையும் அதிகமாக குடித்து வருகிறோம்.

கட்டாய பணி

விருதுநகரை சேர்ந்த வணிகர் செந்தில்குமார்:-

சுட்டெரிக்கும் வெயிலில் வணிகர்களாகிய நாங்கள் எங்கள் பணியை தொடர வேண்டிய கட்டாயம் உள்ளது. எனினும் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க தொடர்ந்து தேவைப்படும் போதெல்லாம் தண்ணீர் குடித்துக் கொள்கிறோம். இளநீர், மோர் உட்கொள்வதையும் வழக்கமாக கொண்டுள்ளோம்.

எனினும் வெயிலின் தாக்கம் அதிகமாக தான் உள்ளது. இந்நிலையில் வாடிக்கையாளர்களையும் வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க விரும்புகிறோம். ஆனாலும் விதிமுறைகள் இடம் பெறாத நிலையில் அதுபற்றி கலந்தாலோசித்து வருகிறோம். கடந்த காலங்களில் மெயின் பஜாரில் பந்தல் போடுவது வழக்கம். தற்போது நெடுஞ்சாலை என்று காரணம் காட்டி அதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. வாடிக்கையாளர்களை பாதுகாப்பது எங்கள் கடமை என்பதை கருத்தில் கொண்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். மேலும் மதிய வேளைகளில் வீட்டுக்கு செல்லாமல் வணிக நிறுவனத்தில் இருந்து கொள்கிறோம். வெளியில் உள்ள பணிகளை காலை நேரத்திலோ அல்லது மாலை நேரத்திலோ மேற்கொள்கிறோம். எப்படியாயினும் கோடை வெயிலை சமாளித்து தானே ஆக வேண்டி உள்ளது.

விற்பனை மும்முரம்

தென்காசியை சேர்ந்த நுங்கு வியாபாரி மாரியப்பன்:- தென்காசி மாவட்டத்தை சேர்ந்த நான் கடந்த 2 வருடங்களாக சிவகாசியில் நுங்கு மற்றும் பதநீர் வியாபாரம் செய்து வருகிறேன். அதிகாலை 4 மணிக்கு சொந்த ஊரில் இருந்து சரக்கு வாகனத்தில் வரும் நான் இங்கு தினமும் ரூ.2,500 முதல் ரூ.3 ஆயிரம் வரையில் நுங்கு மற்றும் பதநீர் விற்பனை செய்து வருகிறேன். சிவகாசி மக்கள் இயற்கையோடு ஒன்றி வாழ்பவர்கள். இவர்கள் இயற்கை பானங்களை அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள். தற்போபது கோடைக்காலம் என்பதால் நுங்கு, பதநீர் விற்பனை நன்றாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடர்ச்சியாக 1 வாரம் இங்கு மழை விட்டு, விட்டு பெய்ததால் நுங்கு மற்றும் பதநீர் விற்பனை சரிந்தது. தற்போது வியாபாரம் பரவாயில்லை. காலை 8 மணிக்கு எல்லாம் பொதுமக்கள் கடையை தேடி வந்துவிடுவார்கள். நுங்கு, பதநீர் உடலுக்கு மிகவும் நல்லது.

பருத்தி ஆடை

விருதுநகரை சேர்ந்த பருப்பு வணிகர் பாஸ்கரன்:-

கோடை வெயில் தாக்கம் அதிகம் உள்ள நிலையில் அதை சமாளிக்க முடிந்தவரை பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து கொள்கிறோம். தவிர்க்க முடியாத நிலையில் மதிய வேளையில் வெளியே செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனினும் பணிகளை விரைந்து முடித்துவிட்டு திரும்பி விடுவேன். மேலும் உடலில் நீர்ச்சத்துகுறையாமல் இருக்க அதிக அளவு தண்ணீர் குடிப்பதோடு இளநீர், மோர் போன்ற திரவ உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதுண்டு.

ஆனாலும் இதுவரை இல்லாத வகையில் தற்போது விருதுநகரில் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது. ஆதலால் முடிந்தவரை பருத்தி ஆடைகளையே அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். முதியோர் பலர் இந்த வெயிலை தாங்க முடியாமல் அவதிப்படுவதைக் கண்டு வேதனை அடைய வேண்டிய நிலை உள்ளது. முடிந்தவரை சேவை சங்கம் மூலம் பொது மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளேன்.

சுட்டெரிக்கும் வெயில்

வியாபாரி சந்துரு:-

அருப்புக்கோட்டை பகுதியில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் பொதுமக்கள், பெண்கள் வீட்டிலிருந்து வெளியே வர அச்சமடைந்துள்ளனர். அவ்வாறு வெளியே வரும் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தினால் குளிர்பான கடைகள், பழமுதிர்சோலை, இளநீர் கடைகள், நுங்கு, பதநீர் விற்பனை செய்யும் இடங்களை தேடி தங்களது தாகங்களை தீர்த்து வருகின்றனர். நான் சுரண்டையில் இருந்து அருப்புக்கோட்டை, பாளையம்பட்டி பகுதிக்கு வந்து விற்பனை செய்து வருகிறேன்.

முன் எச்சரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையம் அருகே கரும்புச்சாறு விற்பனை செய்யும் முருகேசன் கூறுகையில், தற்போது வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டி அடிக்கிறது. மக்கள் வெயில் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள தேவையின்றி வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் கரும்புச்சாற்றினை எலுமிச்சம் பழம் சேர்த்து நன்கு பருகலாம்.

கடந்த சில நாட்களாக கரும்புச்சாறு விற்பனை அமோகமாக உள்ளது. கோடையில் வரும் நோய்களை தடுக்க மக்கள் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மத்திய, மாநில சுகாதாரத்துறை அறிவுரை

கோடைக்கால நோய்களை தவிர்க்கவும், வெப்பத்தாக்கத்தில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் மத்திய, மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தல்கள் விடுத்து வருகின்றன. அந்த வகையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பின்பற்ற வேண்டிய எளிய சில வழிமுறைகளை அறிவித்து உள்ளன.

குறிப்பாக நடப்பு ஆண்டு சுட்டெரிக்கும் வெயிலின் அளவு அதிகமாக இருக்கும் என்றும், வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் வெப்ப அலை தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவசியமானது. வெயிலில் அதிக நேரம் செல்ல வேண்டிய நிலைமை இருந்தால் வெப்பத்தை தடுக்கும் ஆடைகளை அணியுங்கள். குறிப்பாக பருத்தி ஆடைகளே சிறந்தது. அடர் நிறம் மற்றும் இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிருங்கள். சன்ஸ்கிரீன் பூசுவதற்கு மறக்காதீர்கள். மதுபானம் அருந்துவதை முற்றிலும் தவிருங்கள். மது அதிகம் அருந்தினால் நீரிழப்பை ஏற்படுத்தும். இதனால் வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்படக்கூடிய நிலை உருவாகும்.

மருத்துவ உதவியை நாடுங்கள்

வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் சூழலில் மிக கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடாதீர்கள். மின்சார உபகரணங்களை அதிகமாக பயன்படுத்தாதீர்கள். அவையும் வெப்பத்தை உருவாக்கி வீட்டின் வெப்பநிலையை அதிகரித்துவிடும். வெயில் காலத்தில் ஏற்படும் தலைச்சுற்றல், குமட்டல், உடல் சோர்வு, உடல் பலவீனம் போன்ற அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள். அவை வெப்ப பக்கவாதத்திற்கான எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கலாம். தேவைப்பட்டால் மருத்துவ உதவியை நாடுங்கள்.

போதுமான அளவு தண்ணீர் குடிக்க மறக்காதீர்கள். இல்லாவிட்டால் நீரிழப்புக்கு ஆளாக வேண்டியிருக்கும். மொட்டை மாடி போன்ற கான்கிரீட் தளம் கொண்ட மேற்பரப்புகளில் அதிக நேரத்தை செலவிடாதீர்கள். அவை சூரியனின் கதிர்களை அதிகம் பிரதிபலிக்கும். உங்கள் உடலை சட்டென்று வெப்பமாக்கிவிடும். பகல் வேளையில் வீட்டின் ஜன்னல்களை மூடிய நிலையில் வைக்காதீர்கள். ஏனெனில் இது வெப்பத்தை அதிகப்படுத்தி அறையை இன்னும் சூடாக மாற்றும்.

அதிக நேரம் சூரிய ஒளி

வெயில் காலத்தில் நீர் நிலைகளில் நீந்துவது உடலை இதமாக்கும். எனினும் பாதுகாப்பான சூழல் கொண்ட நீர்நிலைதானா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். வெயில்படும்படியான இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் உலோகப் பொருட்களைத் தொடாதீர்கள். அவை அதிக வெப்பமடைந்து தீக்காயங்களை ஏற்படுத்தும். முகம் மற்றும் கண்களை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க தொப்பி, கண்ணாடி அணிய மறக்காதீர்கள். கொழுப்பு அதிகம் உள்ள உணவுகள், செரிமானம் ஆவதற்கு கடினமான உணவுகளை உண்ணாதீர்கள்.

ஏனென்றால் இந்த உணவுகள் மந்தமாக உணர வைக்கும். மேலும் உடலின் வெப்பநிலையை அதிகரிக்க செய்துவிடும். அதிக நேரம் சூரிய ஒளி சருமத்தில் படும்படி வைத்துக்கொள்ளாதீர்கள். அது தோல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்