கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்கும் வழிமுறைகள்

கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்கும் வழிமுறைகள் குறித்து மருத்துவர், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2023-05-18 16:55 GMT

அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. சென்னை உள்பட பல மாவட்டங்களில் தினமும் வெயில் சதமடித்துக் கொண்டிருக்கிறது. அனல் காற்று வீசுகிறது.

கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பித்து கொள்வதற்காக சிலர் ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர்பிரதேசங்களை தேடி செல்கின்றனர். பலர் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். கோடை வெப்பத்தில் இருந்து பிள்ளைகளை காத்து கொள்வதற்காக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

வெப்பத்தால் ஏற்படும் வியர்வை மூலமாக உடலில் இருந்து வெளியேறும் உப்பு சத்துகளை ஈடு செய்வதற்காக நீர் மோர், பதநீர், நுங்கு, இளநீர், தர்பூசணி, எலுமிச்சை சாறு மற்றும் பழச்சாற்றை அருந்தும்படி ஆலோசனை வழங்கப்படுகிறது.

கொளுத்திவரும் கோடை வெயிலை பொதுமக்கள் எவ்வாறு சமாளித்து வருகிறார்கள் என்பது பற்றி சிலரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அளித்த பதில் விவரம் வருமாறு:-

கொளுத்தும் வெயில்

திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை கோடைகாலம் தொடங்கும் முன்பே வெயில் வாட்டி வதைக்க தொடங்கியது. அதிலும் கடந்த சில நாட்களாக தினமும் சராசரியாக 100 டிகிரி வெயில் கொளுத்துகிறது. சாலைகள் அனலாக கொதிப்பதால் வாகனங்களில் கூட செல்ல முடியவில்லை. அந்த அளவுக்கு கோடை வெப்பம் அதிகமாக உள்ளது.

இதனால் மக்கள் நீர்நிலைகளை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். நகரவாசிகள் நீச்சல் குளங்களில் கட்டணம் செலுத்தி குளியல் போட்டு வெப்பத்தை தணிக்கின்றனர். அதேபோல் கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க கொடைக்கானல், சிறுமலை போன்ற மலைவாசஸ்தலங்களில் முகாமிட்டு உள்ளனர்.

இதற்கிடையே நேற்று முன்தினம் 98.6 டிகிரி வெயில் கொளுத்திய நிலையில் நேற்று அதிகபட்சமாக 102.2 டிகிரி வரை வெயில் வாட்டியது. இவ்வாறு கொளுத்தும் கோடை வெயிலை பொதுமக்கள் சமாளித்து வருகிறார்கள் என்பது தொடர்பாக சிலரிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-

நோய்களில் இருந்து தப்பிக்கலாம்

திண்டுக்கல்லை சேர்ந்த டாக்டர் தம்பதி சாம்இளங்கோ-ஜெயவனிதாமணி:- வெயில் காலம் என்றாலே பலருக்கும் ஒருவித பயம் ஏற்படுகிறது. அவ்வாறு வெயிலுக்கு பயப்பட தேவையில்லை. வெயில் காலத்தில் கொன்றை உள்ளிட்ட மரங்கள் பூத்து குலுங்குகின்றன. மரங்கள் மகிழ்ச்சியாக கொண்டாடும் காலமாக இருக்கிறது. எனவே நாமும் வெயில் காலத்தை ஒதுக்காமல் நேசிக்க வேண்டும். அதேநேரம் வெயிலில் அதிக நேரம் அலைய வேண்டாம். காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை உச்சபட்ச வெயில் நேரத்தில் வெளியே நடமாடுவதை தவிர்த்தால் போதும். கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க ஒருசிலவற்றை கடைபிடித்தால் மிகவும் நல்லது.

கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் ஒவ்வொமை ஏற்பட்டு நோய்கள் வரலாம். உணவு செரிமானம் ஆகாமல் வாந்தி, வயிற்று போக்கு தொந்தரவு ஏற்படும். அதை தவிர்க்க எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும். மேலும் கோடைகாலத்தில் சிறுநீர் பாதையில் தொற்று, சிறுநீரக கல்லடைப்பு போன்றவை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. அதுபோன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்க இளநீர், தண்ணீர், நீராகாரம் அதிக அளவில் குடிக்க வேண்டும். இதுதவிர அலர்ஜியால் கொப்பளம், படை உள்ளிட்ட தோல் நோய்கள் வரலாம். அதை தடுக்க பருத்தி ஆடைகள், இலகுவான ஆடைகளை அணிவது மிகவும் நல்லது.

கோழி இறைச்சி தவிர்ப்பு

பழனியை சேர்ந்த குடும்ப தலைவி ரிஜ்வானா:- கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் தேவையின்றி வெளியே செல்வது இல்லை. வீட்டிலேயே இருந்தாலும் வெப்பத்தில் இருந்து தப்பிக்க முடியவில்லை. எனவே தினமும் அதிக அளவில் தண்ணீர் குடிக்கிறோம். இளநீர், நுங்கு, எலுமிச்சை ஜூஸ் போன்றவற்றை அவ்வப்போது எடுத்து சாப்பிடுவதால் வெப்பத்தை சமாளிக்க முடிகிறது. உடலுக்கு வெப்பத்தை உண்டாக்கும் கோழி இறைச்சி உள்ளிட்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்து விட்டோம். தினமும் காலை, மாலை நேரங்களில் குளிப்பதால் உடல் குளிர்ந்து விடுவதோடு, தூய்மையாகவும் வைத்து கொள்ள உதவியாக இருக்கிறது.

மரம் வளர்க்க வேண்டும்

வேடசந்தூரை சேர்ந்த தம்பதி சந்திரசேகர்-அமுதா:- ஒவ்வொரு ஆண்டும் வெயிலின் அளவு அதிகமாகி கொண்டே வருகிறது. மரங்களை வெட்டி அழித்ததால் வெப்பத்தின் அளவு அதிகரிக்கிறது. பருவ நிலை மாற்றத்தால் மழை பொய்த்து விட்டதால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க தேவைக்கு ஏற்ப தண்ணீர் குடிப்பதோடு, தினமும் இளநீர் குடிக்கலாம். அதேநேரம் கோடை வெப்பத்தில் நிரந்தர தீர்வு காண்பதற்கு ஒவ்வொரு நபரும் ஒரு மரம் வளர்க்க வேண்டும். அதன்மூலம் பருவகாலத்தில் மழை பெய்து, வெப்பத்தை குறைக்கலாம். நாங்கள் மரம் நட்டு வளர்க்கிறோம். அதை பிறரும் கடைபிடிக்க வேண்டும். இதுதவிர பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்களை பயன்படுத்த வேண்டும்.

நல்லெண்ணெய் தேய்த்து குளியல்

செந்துறை அய்யாபட்டியை சேர்ந்த தம்பதி வாசுதேவன்-ராஜாத்தி:- முன்பெல்லாம் மே மாதம் என்றாலே கோடை விடுமுறை கொண்டாட்டம் நினைவுக்கு வரும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சுட்டெரிக்கும் கோடை வெயிலும், உடலை வாட்டி வதைக்கும் வெப்பமும் தான் நினைவுக்கு வருகிறது. இதற்கு இயற்கை வளத்தை நாம் நாசப்படுத்தியதே காரணம். அதை பாதுகாக்க அனைவரும் தங்களுடைய பங்களிப்பை மேற்கொள்ள வேண்டும். அதேநேரம் வெயிலில் இருந்து தப்பிக்க நாங்கள் தாகம் எடுக்காத வகையில் தண்ணீர் குடிக்கிறோம். நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது, இயற்கை குளிர்பானங்களாக இளநீர், பதனீர் கிடைக்கும் போதெல்லாம் வாங்கி குடிக்கிறோம். மதிய வேளையில் தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்த்து விடுகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மத்திய, மாநில சுகாதாரத்துறை அறிவுரை

கோடைக்கால நோய்களை தவிர்க்கவும், வெப்பத்தாக்கத்தில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் மத்திய, மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தல்கள் விடுத்து வருகின்றன. அந்த வகையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பின்பற்ற வேண்டிய எளிய சில வழிமுறைகளை அறிவித்து உள்ளன.

குறிப்பாக நடப்பு ஆண்டு சுட்டெரிக்கும் வெயிலின் அளவு அதிகமாக இருக்கும் என்றும், வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் வெப்ப அலை தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவசியமானது. வெயிலில் அதிக நேரம் செல்ல வேண்டிய நிலைமை இருந்தால் வெப்பத்தை தடுக்கும் ஆடைகளை அணியுங்கள். குறிப்பாக பருத்தி ஆடைகளே சிறந்தது. அடர் நிறம் மற்றும் இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிருங்கள். சன்ஸ்கிரீன் பூசுவதற்கு மறக்காதீர்கள். மதுபானம் அருந்துவதை முற்றிலும் தவிருங்கள். மது அதிகம் அருந்தினால் நீரிழப்பை ஏற்படுத்தும். இதனால் வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்படக்கூடிய நிலை உருவாகும்.

மருத்துவ உதவியை நாடுங்கள்

வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் சூழலில் மிக கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடாதீர்கள். மின்சார உபகரணங்களை அதிகமாக பயன்படுத்தாதீர்கள். அவையும் வெப்பத்தை உருவாக்கி வீட்டின் வெப்பநிலையை அதிகரித்துவிடும். வெயில் காலத்தில் ஏற்படும் தலைச்சுற்றல், குமட்டல், உடல் சோர்வு, உடல் பலவீனம் போன்ற அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள். அவை வெப்ப பக்கவாதத்திற்கான எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கலாம். தேவைப்பட்டால் மருத்துவ உதவியை நாடுங்கள்.

போதுமான அளவு தண்ணீர் குடிக்க மறக்காதீர்கள். இல்லாவிட்டால் நீரிழப்புக்கு ஆளாக வேண்டியிருக்கும். மொட்டை மாடி போன்ற கான்கிரீட் தளம் கொண்ட மேற்பரப்புகளில் அதிக நேரத்தை செலவிடாதீர்கள். அவை சூரியனின் கதிர்களை அதிகம் பிரதிபலிக்கும். உங்கள் உடலை சட்டென்று வெப்பமாக்கிவிடும். பகல் வேளையில் வீட்டின் ஜன்னல்களை மூடிய நிலையில் வைக்காதீர்கள். ஏனெனில் இது வெப்பத்தை அதிகப்படுத்தி அறையை இன்னும் சூடாக மாற்றும்.

அதிக நேரம் சூரிய ஒளி

வெயில் காலத்தில் நீர் நிலைகளில் நீந்துவது உடலை இதமாக்கும். எனினும் பாதுகாப்பான சூழல் கொண்ட நீர்நிலைதானா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். வெயில்படும்படியான இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் உலோகப் பொருட்களைத் தொடாதீர்கள். அவை அதிக வெப்பமடைந்து தீக்காயங்களை ஏற்படுத்தும். முகம் மற்றும் கண்களை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க தொப்பி, கண்ணாடி அணிய மறக்காதீர்கள். கொழுப்பு அதிகம் உள்ள உணவுகள், செரிமானம் ஆவதற்கு கடினமான உணவுகளை உண்ணாதீர்கள்.

ஏனென்றால் இந்த உணவுகள் மந்தமாக உணர வைக்கும். மேலும் உடலின் வெப்பநிலையை அதிகரிக்க செய்துவிடும். அதிக நேரம் சூரிய ஒளி சருமத்தில் படும்படி வைத்துக்கொள்ளாதீர்கள். அது தோல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்று அறிவுறுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்